விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திரயான்-3 ஏவப்பட்ட காட்சி எனப் பரவும் SpaceX ராக்கெட் வீடியோ !

பரவிய செய்தி
டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து சந்திரயான் 3 ராக்கெட் ஏவபட்ட காட்சி…
மதிப்பீடு
விளக்கம்
இந்தியா கடந்த ஜூலை 14 அன்று சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், வருகின்ற ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளால் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து சந்திரயான் 3 ராக்கெட் ஏவப்பட்டதை ரசித்த பயணிகள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவை தினமலர் மற்றும் தினகரன் போன்ற ஊடகங்களும் தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் சந்திரயான் 3 ராக்கெட் என்று கூறிப் பகிர்ந்துள்ளன.
டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானம் வரும் நேரம் பார்த்து , ஏவபட்ட சந்திராயன் 3 ராக்கெட், உடனே விமானி தன் பயணிகள் கண்டுகளிக்க அதை அனைவரும் பார்க்கும் வண்ணம் அறிவுருத்துகிறார், மிக பரவசமான தருணம் அந்த விமானத்திலிருந்து….நீங்களும் பாருங்கள் 👌💐 pic.twitter.com/eNVhmIvGvc
— anantham (@ananthamharshi) July 16, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ குறித்து NDTV தனது பக்கத்தில் கடந்த பிப்ரவரி 16 அன்று “பார்க்க: SpaceX ராக்கெட் ஏவப்படும்போது விமானம் ஒன்றின் ஜன்னலில் இருந்து பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் SpaceX Falcon 9 ராக்கெட் பூமியை விட்டு வெளியேறும் போது United Airlines விமான பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தேடியதில் CNBC ஊடகம் SpaceX என்ற ராக்கெட் ஏவுதளம் குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பரவி வரும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது போன்றே, ப்ளோரிடாவில் உள்ள எலான் மஸ்க் உடைய SpaceX ராக்கெட் ஏவுதளம் இடம்பெற்றுள்ளதை காண முடிந்தது.
மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவின் 1:15 நிமிட முழு காணொளி NasaNet என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் காண முடிந்தது. அதில் “Cape Canaveral என்ற இடத்தில் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது SpaceX Falcon 9 ராக்கெட் ஏவப்பட்டதைக் காண முடிந்தது.” என்று ஸ்பானிஷ் மொழியில் குறிப்பிட்டுள்ளார்.
இதே வீடியோ டிக்டாக் பக்கங்களிலும் SpaceX Falcon 9 ராக்கெட் ஏவப்பட்ட காட்சி என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிந்தது.
மேலும் படிக்க: ISRO-க்கும் நேருவிற்கும் தொடர்பில்லை எனப் பரப்பும் வலதுசாரிகள்.. உண்மை என்ன ?
மேலும் படிக்க: சந்திரயான்-3 திட்டத்திற்காகப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு:
நம் தேடலில், டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்த பயணிகளால் சந்திரயான் 3 ராக்கெட் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்டதாக பரவி வரும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது சந்திரயான்-3 விண்கலம் அல்ல. இது SpaceX Falcon 9 ராக்கெட் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.