அரிசி மூட்டைகளில் தண்ணீர் அடித்து மது ஆலைக்கு விற்பனையா ?

பரவிய செய்தி
அரிசி மூட்டைகளில் தண்ணீர் அடித்து தானாக நனைந்து விட்டதாக கணக்கு காட்டி மது ஆலைகளுக்கு கிலோ 1 ரூபாய்க்கு விற்கும் அவலம்.
மதிப்பீடு
சுருக்கம்
ஒரிசாவில் இந்திய உணவு கார்ப்பரேஷன் கிடங்கில் பூச்சிகளில் இருந்து காப்பதற்கு கோதுமை மூட்டைகளின் மீது தண்ணீரை அடித்ததுள்ளதாக இதே படங்கள் 2016 ஆம் ஆண்டு வெளியான செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
விளக்கம்
அரசு தானியக் கிடங்குகளில் இருக்கும் அரிசி மூட்டைகள் மீது ஒருவர் தண்ணீரை அடிக்கும் படமானது பலமுறை சமூக வலைத்தளத்தில் வைரலாவதைப் பார்த்திருப்போம். இவ்வாறு தண்ணீரில் நனைந்த அரிசி மூட்டைகளை மது ஆலைகளுக்கு விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுகிறது.
இணையத்தில் வைரலாகிய இப்படங்கள் பற்றி முழுமையான ஆதாரங்கள் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் ஒரிசாவில் நிகழந்ததாக செய்திகள் கிடைத்துள்ளன. எதற்காக மூட்டையின் மீது தண்ணீர் அடித்தனர் என்பது உள்ளிட்ட சில கூடுதல் தகவல்களை காண்போம்.
அரசு தானியக் கிடங்கு :
ஒரிசா மாநிலத்தில் உள்ள ஜகதீஷ்ங்காபூர் பகுதியில் அமைந்துள்ள குருதியா என்ற கிராமத்தில் இந்திய உணவு கார்ப்பரேஷன் தானியக் கிடங்கு அமைந்துள்ளது.
” தானியக் கிடங்கில் இருக்கும் கோதுமையை பூச்சிகளிடம் இருந்து காக்க மூட்டைகளின் மீது கார்ப்பரேஷன் ஊழியர் பைப் மூலம் தண்ணீர் தெளிப்பதாகக் கூறப்படுகிறது. கிடங்கில் இருந்து மூட்டைகள் வெளியே செல்வதற்கு சில நேரங்களுக்கு முன்பாக தண்ணீரை மூட்டையின் மீது அடிக்கின்றனர் “.
இந்த உணவுக் கிடங்கில் இருந்து பல்வேறு நியாயவிலைக் கடைகளுக்கு செல்லும் பொழுது கோதுமையின் எடை குறைவதாக டீலர்கள் அம்மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அதில், தண்ணீர் அடிக்கும் போது மூட்டைக்கு 3 முதல் 4 கிலோ வரை எடை அதிகரிக்கிறது. விற்பனையாகும் போது எடை குறைவாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். நுகர்வோரும் புகார் அளித்தனர்.
இந்திய உணவு கார்ப்பரேஷன் கிடங்கில் கோதுமை மூட்டையின் மீது தண்ணீர் தெளிப்பது பற்றிய செய்திகள் படங்களுடன் 2016-ல் வெளியாகி உள்ளது.
முடிவு :
அரசு தானியக் கிடங்குகளில் அரிசி மூட்டைகள் மீது தண்ணீர் அடித்து மது ஆலைக்கு விற்பதாக பரவும் படங்கள் தவறான தகவலுடன் இணைக்கப்பட்ட ஒரிசா மாநில படங்கள் என அறிய முடிகிறது.
அடுத்து, இந்த சம்பவம் தமிழகத்தில் நடைபெறவில்லை என்பதும் தெளிவாகிறது. சில பதிவுகளில் தமிழகம் என குறிப்பிட்டு இருந்தனர்.
அரசி மூட்டைகள் மீது தண்ணீர் அடித்து மது ஆலைக்கு விற்பதாகக் கூறும் செய்திக்கு ஆதாரங்கள் இல்லையெனினும், ரேஷன் அரிசி மூட்டையை பிற மாநிலங்களுக்கு கடத்துவது, மழையில் தானிய மூட்டைகளை நனைய விடுவது போன்ற பல தவறான செயல்கள் நடப்பதாக செய்திகள் வருவதுண்டு.
பல நாட்கள் உழைப்பில் உருவான உணவை வீணாக்காமல் சரியாக சேகரித்து வழங்கினாலே இங்கு இல்லாமை இல்லாமல் போய்விடும்.