இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்க தயார் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினாரா ?

பரவிய செய்தி
இலங்கை வாழ் மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக(மாநிலமாக) அறிவிக்க தயாராக உள்ளோம். அத்துடன் தற்போது இருக்கும் நெருக்கடியான பெட்ரோல், டீசல், எரிவாயு, உணவுப்பொருட்கள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து அதன் விலைகளை உடனடியாக குறைப்போம். மேலும், இலங்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும் தீர்த்து வைக்க கட்டம், கட்டமாக நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டர் மூலம் இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
பொருளாதார நெருக்கடியால் பெரும் பாதிப்பில் இருக்கும் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக இணைக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தயாராக இருப்பதாகவும், இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுத்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாகவும் தினமலர் செய்தித்தாளின் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
இலங்கையை இந்தியாவுடன் இணைப்பது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எந்தவொரு ட்வீட் பதிவு வெளியிடவில்லை மற்றும் எந்தவொரு செய்தியோ வெளியாகவில்லை. மேலும், வைரலாகும் தினமலர் செய்தித்தாள் பக்கம் எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என தெளிவாய் தெரிகிறது.
இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்புரீதியானதும், நெருக்கமானதும், தொன்மையானதுமான உறவை பாதிக்கும்வகையில், அவநம்பிக்கைகொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய நோக்கத்துடனான இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை.
— India in Sri Lanka (@IndiainSL) April 20, 2022
இதுகுறித்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ” இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களின் ருவிட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போலியான படம் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம். இது முழுக்கமுழுக்க போலியானதும் புனையப்பட்டதுமாகும். தீய எண்ணத்துடனான இதன் உள்ளீடுகளை நாம் கடுமையாக மறுக்கின்றோம்.
இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்புரீதியானதும், நெருக்கமானதும், தொன்மையானதுமான உறவை பாதிக்கும் வகையில், அவநம்பிக்கை கொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய நோக்கத்துடனான இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை ” என ஏப்ரல் 20-ம் தேதி பதிவிட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், இலங்கை வாழ் மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்க தயாராக உள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக பரவும் செய்தி வதந்தி என அறிய முடிகிறது.