இலங்கையில் உள்ள இராவணனின் அரண்மனை எனப் பரப்பப்படும் தவறான தகவல் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இராமாயணத்தில் வரும் இலங்கை அரசன் இராவணனின் அரண்மனை, சிலோன் சென்று பார்க்க முடித்தவர்களுக்காக இந்த காட்சி எனக் கூறி 1.30 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
சிலோன் போயிபாக்க முடியாதவர்களுக்காக இந்த காட்சி பகிர்வு . 💜❤️💚 இலங்கை அரசன் இராவணனின் அரண்மனை. pic.twitter.com/Eqki0ELqFj
— Aadhavan (@aadaavaan) March 23, 2023
இலங்கை அரசன் இராவணனின் அரண்மனை என்று சொல்லப்படும் சொர்ணலங்கை .. pic.twitter.com/HhcJzeiqOm
— கைப்புள்ள (@kaippulla123) March 20, 2023
அவ்வீடியோவில், காட்டிற்கு நடுவே அமைந்துள்ள மலையின் மீது பழமையான கட்டுமானங்கள் இருந்ததற்கான சுவடுகள், குளம் உள்ளிட்டவை இருப்பதும், அங்கு சுற்றுலா பயணிகள் பார்வையிடும் ட்ரோன் காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவின் தொடக்கத்தில், ” Sigiriya Rock Fort, Srilanka “ என்ற பெயர் இடம்பெற்று இருக்கிறது. இலங்கையில் உள்ள சிகிரியா கோட்டை பற்றித் தேடுகையில், sigiriyafortress எனும் இணையதளத்தில், கி.பி 477-495 வரை ஆட்சியில் இருந்த காஸ்யபா (King Kasyapa) எனும் மன்னரால் இக்கோட்டை கட்டப்பட்டது எனக் கூறப்பட்டு உள்ளது. இது இலங்கையின் முக்கிய சுற்றுலா தளமாக அமைந்துள்ளது.
சிகிரியா சிங்கப் பாறை(Sigiriya Lion Rock) என்பது பழங்கால பாறை கோட்டை. பாரிசிடல் மன்னன் காஸ்யபா கட்டிய தலைநகரின் இடிபாடுகள் சிகரத்தின் உச்சில் உள்ளன. பாறையின் உச்சியில் கட்டப்பட்ட அரண்மனைக்கு செங்கற்கள் மற்றும் பிளாஸ்டரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிங்கத்தின் வாயில் இருந்து படிக்கட்டுகள் செல்கின்றன. அங்குள்ள பாறைகளில் பழங்கால ஓவியங்கள் காணப்படுகின்றன.
கி.பி 477-495 வரை ஆட்சி செய்த காஸ்யப மன்னர், அரியணைக்கு சரியான வாரிசான தனது சகோதரர் மொகல்லானாவின் தாக்குதல்கள் குறித்து கவலைப்பட்டதால், இதை அரச இல்லமாகத் தேர்ந்தெடுத்தார். இவர் தனது தந்தையும், மன்னருமான ததுசேனருக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவரை கொன்றதாகவும் கூறப்படுகிறது.
சிகிரியா சிங்கப் பாறையை தனது வசிப்பிடமாக காஸ்யப மன்னர் பயன்படுத்துவதற்கு முன்பு புத்த துறவிகள் வாழும் பகுதியாக(மடாலயம்) கருதப்பட்டது. காஸ்யப மன்னரின் மரணத்திற்கு பிறகு 14ம் நூற்றாண்டில் அரண்மனைப் பகுதிகள் கைவிடப்படும் வரை இது ஒரு புத்த மடமாக பயன்படுத்தப்பட்டது. கைவிடப்பட்ட சிகிரியா சிங்கப் பாறையானது 1831ம் ஆண்டு பிரிட்டிஷ் இராணுவ மேஜர் ஜொனாதன் ஃபோர்ப்சால் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என இணையதளத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
1982ம் ஆண்டு பழமையான சிகிரியா நகர தளம் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. யுனெஸ்கோவின் இணையதளத்திலும் சிகிரியா பாறை அரண்மனை மன்னர் காஸ்யப ஆட்சியில் கட்டப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பல்வேறு தளங்களில் சிகிரியா அரண்மனையை இராவணன் வசித்த அரண்மனை எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இந்தியாவில் இருந்து சுற்றுலாச் செல்லும் பயணிகளும் இராவணன் கோட்டை என்றே வீடியோவை வெளியிடுகின்றனர். ஆனால், அதற்கு வரலாற்றுரீதியாக உறுதியான ஆதாரங்கள் இல்லை. அது காஸ்யபா மன்னரால் கட்டப்பட்ட அரண்மனை.
முடிவு :
நம் தேடலில், இலங்கையில் இராவணன் வசித்த அரண்மனை எனப் பரப்பப்படும் வீடியோவில் இடம்பெற்ற பகுதி சிகிரியா கோட்டை. கி.பி 477-495 வரை ஆட்சியில் இருந்த மன்னன் காஸ்யபா சிகிரியா பாறை மீது கட்டிய தலைநகரின் இடிபாடுகளே வீடியோவில் இடம்பெற்றுள்ளன என்றும், இது உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.