இலங்கையில் சீதை அமர்ந்த பாறை யோகி ஆதித்யநாத்திடம் அளிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

ராம ராவணன் யுத்தம் முடியும் வரை அசோக வனத்தில் ஸ்ரீ சீதா தாயார் அமர்ந்திருந்த தெய்வீகக் கல்லை உத்தரபிரதேச முதல்வர் இலங்கை அரசிடமிருந்து மிக உயர்ந்த மரியாதையுடன் பெறுகிறார். இந்த தெய்வீக கல் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் நிறுவப்படும்

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

இராமாயண இதிகாசத்தில் கூறப்பட்ட இலங்கையில் இருக்கும் அசோகா வனத்தில் சீதை அமர்ந்து இருந்த பாறை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக 3 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Twitter link | Archive link 

இந்திய அளவில் வைரலாகும் வீடியோவில், இலங்கை விமானத்தில் வந்திருக்கும் புத்த மத துறவிகளை யோகி ஆதித்யநாத் வரவேற்கிறார். வாத்தியக் கருவிகள் இசைகள் கண்ணாடி பேழையில் இருக்கும் பொருள் ஒன்றிற்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இறுதியாக, அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.

உண்மை என்ன ? 

2021 அக்டோபர் 20-ம் தேதி நியூஸ்டெய்லிஇந்தியா எனும் இணையதளத்தில், ” இலங்கையில் இருந்து குஷிநகருக்கு வந்த புத்த மத துறவிகளுக்கு முதல்வர் யோகி மற்றும் அமைச்சர்கள் பலர் பெரும் வரவேற்பு அளித்ததாக ” அவர்களின் வருகை குறித்து செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்த செய்தியில் இந்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, அக்டோபர் 19-ம் தேதி பதிவிட்ட ட்வீட் இடம்பெற்று இருந்தது. அந்த பதிவில், ” அக்டோபர் 20-ம் தேதி அபிதம்மா தினத்தின் பிரமாண்டமான கொண்டாட்டங்களின் போது, புனித புத்தரின் நினைவுச்சின்னம் உ.பி-யில் உள்ள குஷிநகருக்கு எடுத்துச் செல்லப்படும் ” என புகைப்படங்களுடன் பதிவிட்டு இருந்தார்.

Twitter link | Archive link  

மேலும், அக்டோபர் 20-ம் தேதி அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி ட்விட்டரில், ” அஸ்வின் பூர்ணிமாவை முன்னிட்டு இலங்கையில் இருந்து புத்தரின் நினைவுச்சின்னம் கொண்டு வரப்பட்டதாகவும், அதை அபிதம்மா தின கொண்டாட்டத்தின் போது காட்சிப்படுத்தப்படும் ” என துறவிகளுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link 

அக்டோபர் 19-ம் தேதி இந்தியக் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், அக்டோபர் 20-ம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் குஷிநகரில் நடைபெறும் அபிதம்மா தின நிகழ்ச்சியில் இலங்கை, தாய்லாந்து, மியான்மர், தென் கொரியா, நேபாளம், பூடான், கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த துறவிகள் பங்கேற்க உள்ளனர்.

Twitter link | Archive link  

இதில், இலங்கை வஸ்கடுவ ஸ்ரீ சுபுத்தி ராஜ்விஹார ஆலயத்தில் இருந்து புனித புத்தர் நினைவுச் சின்னம் கொண்டு வருவது நிகழ்வின் சிறப்பு அம்சமாகும் ” என புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், இலங்கை அசோக வனத்தில் சீதை அமர்ந்து இருந்த பாறையை உத்தரப் பிரதேச முதல்வர் இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டதாக பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த வீடியோவில் புத்த துறவிகளால் கண்ணாடி பேழையில் கொண்டு வரப்பட்டது புனித புத்த நினைவுச்சின்னமே தவிர சீதை அமர்ந்த பாறை அல்ல என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader