This article is from May 11, 2019

இலங்கையில் முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

இலங்கை குண்டு வெடிப்பிற்கு பிறகு நடத்தப்பட்ட சோதனையில் முஸ்லிம்கள் நடத்தும் உணவகத்தில் கருத்தடை மாத்திரை பயன்படுத்தப்பட்டது உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்லிம் உணவகத்தில் சாப்பிடும் எவருக்கும் குழந்தை பெற முடியாத மாத்திரையை கலந்துள்ளனர். தமிழகத்திலும் 50% உணவகத்தில் தற்போது இந்த நடைமுறை நடத்தப்படுகிறது. ஆதாரத்துடன் வெளியிட்ட இலங்கை அரசு இலங்கை தமிழ் பத்திரிக்கை.

மதிப்பீடு

சுருக்கம்

இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கி இருந்த ” களஞ்சிய அறை ” இல் இருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்ததாக கலவரம் உண்டாகின.

இலங்கையில் போலீசார் கைப்பற்றிய மாத்திரைகள் என்ன ? முஸ்லீம் உணவகத்தில் கருத்தடை மாத்திரை கலந்ததாக நடந்த நிகழ்வு பற்றி விரிவாக படிக்கவும்.

விளக்கம்

இலங்கையில் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு நடத்தப்பட்டு வரும் சோதனைகளில் முஸ்லீம்கள் உணவகத்தில் கருத்தடைகள் மாத்திரைகள் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்திலும் இந்த நடைமுறை இருப்பதாக குறிப்பிட்டது அந்த ஃபார்வர்டு செய்திகள்.

ஐ.எஸ் நாசக்கார கும்பல் :

இலங்கை தமிழ் செய்திகளில் ஐ.எஸ் நாசக்கார கும்பல்களின் ” களஞ்சிய அறையில் ” இருந்து இலங்கை அதிரடிப் படையினர் கருக்கலைப்பு மாத்திரைகள், போதை மாத்திரைகள், பாலியல் உணர்வைத் தூண்டும் மாத்திரைகளை கைப்பற்றியதாக கூறி இருந்தனர். பல தமிழ் செய்திகளிலும் இதே உள்ளடக்கமே இடம்பெற்றது.

எனினும், சமீபத்தில் இலங்கை அதிரடிப்படையினர் கைப்பற்றியது மலட்டுத்தன்மை மாத்திரை அல்ல என்றும், கருத்தடை மாத்திரைகள் என போலிச் செய்திகள் பரவி வருவதாகவும் ஓர் செய்தியில் பார்க்க முடிந்தது.

” அந்த மாத்திரைகள் மிபிரிஸ்டோன் மற்றும் மிஸோபிரிட்டோஸ்டோஸ் ஆகியனவாகும். இது சாதாரணமாக ஆரம்பக்கால பிரசவத்தை முடிப்பதற்கு பயன்படும். வயிற்று புண்களை சுகமாக்க மற்றும் பிரசவத்தின் பின்னான இரத்தப்போக்கை நிறுத்த மிஸோபிரிட்டோஸ்டோஸ் பயன்படும். மேலும், இந்த மாத்திரைகள் பெண்களிடையே மலட்டுத் தன்மையை உருவாக்கமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது ” எனக் கூறி இருந்தனர்.

சமீபத்தில் இலங்கை அதிரடிப்படையினர் கைப்பற்றியவை மிஸோபிரிட்டோஸ்டோஸ் போன்றவை, அவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது, குறிப்பாக முஸ்லிம்கள் உணவகத்தில் இருந்து கைப்பற்றவில்லை எனத் தெளிவாகி உள்ளது.

முஸ்லீம் உணவகம் :

2018-ல் இலங்கையில் உள்ள அம்பரா எனும் பகுதியில் முஸ்லிம்கள் உணவகத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து உள்ளனர் என வதந்திகள் பரவி முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களிடையே மோதல் உருவாகியது. குற்றாம்சாட்டப்பட்ட உணவகத்தை அடித்து நொறுக்கியதோடு, கடைக்கு தீயிட்டு கொளுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி நாடு முழுவதிலும் கலவரம் உண்டாகி தாக்குதலை தொடங்கினர். ஆனால், முஸ்லீம் உணவகத்தில் இருந்தது ஸ்டார்ச் என இலங்கையின் சிறந்த மருத்துவ குழு உறுதிப்படுத்தினார்கள். மேலும், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்தனர்.

இறுதியில், இரண்டு வெவ்வேறு செய்தி, புகைப்படத்தை பயன்படுத்தி வன்மத்தை உருவாக்கி உள்ளார். தற்போது அந்த அச்சத்தை தமிழ்நாடு வரை பரப்பி வருகின்றனர். இலங்கை முஸ்லீம் உணவகம் பற்றிய ஃபார்வர்டு செய்திகள் முற்றிலும் வதந்தியே !

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader