This article is from Aug 17, 2019

இலங்கை திருவிழாவில் எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கும் 70 வயது யானை !

பரவிய செய்தி

இலங்கை, கண்டியில் நடக்கும் ஈசாலா பெரஹேரா திருவிழாவில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையை எப்படி சித்திரவதை செய்கிறார்கள் பாருங்கள்…மக்களுக்கு ஆசி வழங்க பொன்னாடை போர்த்தப்பட்ட யானை, எலும்பும் தோலுமாக நிற்கும் பரிதாபக் காட்சி…

 

மதிப்பீடு

சுருக்கம்

70 வயதை கடந்து உடலில் வலு இல்லாமல் எலும்பும் தோலுமாய் இருக்கும் டிக்கிரி யானையின் நிலை தற்பொழுது சமூக ஊடகங்கள் மூலம் உலக யானைகள் தினத்தில் இருந்து வைரலாகி வருகிறது.

விளக்கம்

திடமான உடல் அமைப்பை கொண்டு கம்பீரமாக நடைபோட்டு வரும் யானைகள் மத்தியில் எலும்பின் மீது தோலைப் போர்த்தியது போன்று காட்சியளிக்கும் யானையை இலங்கையில் உள்ள திருவிழாவில் அலங்கரித்து சித்திரவதை செய்யவதாக முகநூலில் மேற்கண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பரிதாப நிலையில் இருக்கும் யானையின் நிலை குறித்த உண்மைத்தன்மை குறித்தும், இந்த புகைப்படங்களை வெளியிட்டவர்கள் குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

” இது டிக்கிரி எனும் 70 வயதான பெண் யானை. இந்த வருடம் இலங்கையில் நடைபெறும் பெரஹேரா திருவிழாவில் பணியில் இருந்த 60 யானைகளில் இவளும் ஒன்று ” என நீண்ட பதிவு ஒன்றை ஆகஸ்ட் 13-ம் தேதி Save Elephant Foundation உடைய நிறுவனர் லெக் சைலேர்ட் முகநூலில் புகைப்படங்களுடன் பதிவிட்டு இருந்தார்.

70 வயதான டிக்கிரி யானையின் மோசமான உடல்நிலையை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. புத்த மத திருவிழாவான ஈசாலா பெரஹேராவில் இலங்கையின் மையப் பகுதியில் உள்ள கண்டியில் யானைகளுக்கு அழகான உடைகள் அணிந்து, அலங்கரித்து மக்களுக்கு ஆசீர்வதிக்க செய்கின்றனர்.

அனைத்து யானைகளை போன்றும் டிக்கிரியையும் அலங்கரித்து விழாவில் நிற்க வைத்து அதன் மீது ஒருவர் அமர்ந்து இருக்கும் புகைப்படமும், விழா முடிந்த பிறகு அலங்கார உடைகள் இல்லாமல் இருக்கும் யானையின் தோற்றம் மனதை வருந்த வைக்கிறது.

திருவிழாவில் ஒவ்வொரு இரவிலும் பல கி.மீ தொலைவிற்கு நடக்கும் டிக்கிரி யானையின் பரிதாப உடலை யாரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அதன் உடல் முழுவதும் அலங்கார உடையை வைத்து மறைத்து இருக்கின்றனர். அதன் முகத்திலும் கூட முகமூடி போன்று அலங்கரித்து உள்ளனர்.

டிக்கிரி யானையின் பரிதாபநிலை கருத்தில் கொண்டு அதன் பணியில் இருந்து விடுவிக்குமாறு Save Elephant Foundation ஆன்லைன் வழியாக இலங்கை அரசிற்கு கோரிக்கை அனுப்பி இருந்தது. அரசிற்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் 13,000 பேரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.

ஆகஸ்ட் 15-ம் தேதி டிக்கிரி யானை கீழே விழுந்து கிடக்கும் புகைப்படத்தை Save Elephant Foundation முகநூலில் வெளியிட்டது. விலங்குநல ஆர்வலர்கள் டிக்கிரி யானையை விடுவிக்கும்படி குரல் கொடுத்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் கண்டங்கள் எழுந்த பிறகு இலங்கையின் சுற்றுலா மற்றும் வனத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா வெளியிட்ட அறிக்கையில், ” டிக்கிரி யானையை கட்டாயப்படுத்தி விழாவில் பங்குபெற வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாகக் கூறியுள்ளார்”.

மேலும், புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நாளில் மட்டுமே டிக்கிரி யானை திருவிழாவில் கலந்து கொண்டதாக லண்டனில் உள்ள இலங்கை ஹை கமிஷன் தெரிவித்து இருக்கிறது.

பாரம்பரியம், வழிபாடு என தொடர்ந்து கடைபிடித்து வரும் பழக்கவழக்கம் என்றாலும் அதில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் உடல்நிலையை கருத்தில் கொள்வது மிக முக்கியமானது. விலங்குகளுக்கும் இரக்கம் காட்டுவதே மனிதத்துவம்.

Updated : 

இலங்கை திருவிழாவில் எலும்பும் தோலுமாய் காட்சியளித்த டிக்கரி என்ற 70 வயது யானை இறந்த சம்பவம் பல நாடுகளில் முதன்மை செய்திகளில் வெளியாகி வருகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த டிக்கிரி இறந்த செய்தி உலகம் முழுவதும் அதன் மீது அன்பு கொண்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வயது மூப்பின் காரணமாகவே யானை உயிரிழந்து உள்ளதாக அதன் உரிமையாளர் ட்ரூ தெரிவித்து உள்ளார். 70 வயதான பெண் யானை டிக்கிரியின் இறுதிச் சடங்கு கேசாலையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

”  டிக்கிரியின் ஆன்மா தற்பொழுது சுதந்திரம் அடைந்தது, இனி அதற்கு துன்பங்கள் இல்லை ” என Save Elephant Foundation உடைய நிறுவனர் லெக் சைலேர்ட் தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader