SRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி !

பரவிய செய்தி
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மூன்று மாணவிகள் கற்பழித்து கொலை. இதை மூடி மறைக்கவே நேசமணி விவகாரம் பெரிய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
மதிப்பீடு
சுருக்கம்
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஒரு மாணவரும், ஒரு மாணவியும் அடுத்தடுத்த நாட்களில் விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மாணவிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக தவறான படங்கள் பகிரப்படுகின்றன.
விளக்கம்
சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான எஸ்.ஆர்.எம் கல்லூரியில் அடுத்தடுத்த நாட்களில் ஒரு மாணவரும், ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.
அதற்கு காரணம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த சம்பவத்தை மூடி மறைக்கவே நேற்றைய தினத்தில் நேசமணி கதாப்பாத்திரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியது என ஃபேஸ்புக் வட்டாரத்தில் மீம் பதிவுகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவிகள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டு உள்ளதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
மீம் பதிவில் இருக்கும் பெண்களின் படமானது, 2018-ல் நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவர்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இறந்தது ஒரு மாணவியும், ஒரு மாணவரும் ஆவர். மே 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை, காலை 8.40 மணிக்கு) அன்று 21 வயதான அனுப்ரியா எனும் பயோமெடிக்கல் துறை மாணவி விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தேர்வுகள் முடிந்தும் அனுப்ரியா விடுதியை விட்டு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணையில் அனுப்ரியாவின் அறையில் தற்கொலை குறித்து கடிதம் கிடைத்துள்ளது. அதில், வீட்டில் சுதந்திரம் இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும், மேலும் தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும் எழுதியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக செய்திகளில் வெளியாகி உள்ளது.
அனுப்ரியா தற்கொலைக்கு பிறகு அடுத்த நாள் திங்கட்கிழமை அன்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான அனீஸ் செளத்திரி எனும் முதலாம் ஆண்டு மாணவர் விடுதியின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராக்கிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டவர். ஆனால், இறந்த மாணவர் படிப்பில் பின்தங்கி இருந்ததாகவும், பொறியியல் படிப்பு அவருக்கு கடுமையானதாக இருந்த காரணத்தினால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என கல்லூரியின் பிஆர் கூறியதாக செய்தியில் வெளியாகி உள்ளது.
இரு தற்கொலை சம்பவம் தொடர்பாகவும் மறைமலை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஒரு மாணவரும், ஒரு மாணவியுமே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இது தொடர்பான புகார்கள் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடாத நிலையில் தவறான படங்களும் பரவி வருகிறது.
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஒரு மாணவரும், ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தவும், கல்லூரி நிர்வாகம் மீது தவறு இருப்பின் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் மாற்றமும் இல்லை. இரண்டு தற்கொலைகளும் அடுத்தடுத்த நாட்களில் நடந்ததால், இதில் கல்லூரியின் பங்கு என்ன என்ற கேள்வி எழுப்பப்படுவது நியாயமானது. அதற்கு கல்லூரி தரப்பில் சரியான விளக்கம் தர வேண்டும். காவல் துறையும் முறையாக விசாரிக்க வேண்டும் என்பதிலும் மாற்றமில்லை. அது நிச்சயமாக நடந்தே தீர வேண்டும். மாணவர்களின் உயிர்க்கு உத்திரவாதம் போன்ற விஷயங்கள் முக்கியமானது.
அது ஒருபுறம் இருக்க மூன்று மாணவிகள் என்றும், பாலியல் வன்புணர்வு என்றும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது இறந்தவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், தேவையில்லாத மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்து விடும். யாரையோ எதிர்ப்பதற்காக பதிவிடும் பதிவில் இறந்த மாணவியை கொச்சைப்படுத்த வேண்டாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.