இன்பநிதி என பாஜகவினரால் வைரல் செய்யப்படும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
திமுகவின் அடுத்தடுத்த தலைவர் பதவி கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள் கையில் செல்வதால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி தொடர்பாக அரசியல் ரீதியான விமர்சன மற்றும் தவறான பதிவுகள் சமூக வலைதளங்களில் வரத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், இரு ஆண்களுக்கு நடுவில் நிற்கும் பெண் இருவரையும் மாறி மாறி முத்தமிடும் இரு புகைப்படங்களை பதிவிட்டு, படத்தில் இருப்பது இன்பநிதி என சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைதள பிரிவின் மாநில செயலாளர் மோதிலால் என்பவரும் ட்விட்டர் பதிவிட்டு இருக்கிறார்.
கலைஞரையும் அன்பழகனையும் பாத்த மாதிரியே இருக்கு😍 pic.twitter.com/jJdSNXGRMI
— சுந்தர் நத்தமன் (@alvinsundar) February 13, 2023
உண்மை என்ன ?
இன்பநிதி என வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி பகுதியைச் சேர்ந்த பசில்கான் என்ற ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படங்கள் பதிவிடப்பட்டு உள்ளது. இப்பதிவில், பொதுவாக ட்ரோல் செய்யும் விதத்தில் வார்த்தைகள் இடம்பெற்று உள்ளது. படத்தில் இருப்பது யார் எனும் விவரங்கள் இல்லை.
சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படும் புகைப்படங்களில் இருக்கும் நபர் இன்பநிதி அல்ல, வேறொரு நபர் என கீழ்காணும் ஒப்பீடு மூலம் அறியலாம். மேலும், வைரல் செய்யப்படும் புகைப்படத்தில், அவர்களுக்கு பின்னால் ” cine colombia ” என்ற பெயர் இடம்பெற்று இருக்கிறது.
வைரல் செய்யப்படும் புகைப்படம் கொலம்பியா நாட்டில் உள்ள சினி கொலம்பியா திரையரங்கிற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இப்புகைப்படத்தை வைத்து மீம் மற்றும் ட்ரோல் பதிவுகள் பல வெளியாகி உள்ளன. ஆனால், இப்புகைப்படத்தை தற்போது இன்பநிதி என தவறாக பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : இன்பநிதி அரசியல் : நையாண்டியான போலி ட்வீட்டை உண்மை என நினைத்து பரப்பும் அதிமுக, பாஜகவினர் !
முடிவு :
நம் தேடலில், பாஜகவினரால் வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பது இன்பநிதி அல்ல. அந்த புகைப்படங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக கொலம்பியா நாட்டில் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வரும் புகைப்படம் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.