திமுகவினர் அதிமுக அரசின் பொங்கல் பரிசை வாங்க கூடாது என ஸ்டாலின் கூறினாரா ?

பரவிய செய்தி
மானமுள்ள திமுகவினர் அதிமுக அரசின் பொங்கல் பரிசான 1000 ரூபாயை வாங்கவே கூடாது – முக ஸ்டாலின்
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஆளும் அதிமுக அரசின் சார்பில் பொங்கல் பரிசாக பொருட்களுடன் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்நிலையில், அதிமுக அரசின் பொங்கல் பரிசாக வழங்கும் 1000 ரூபாய் தொகையை மானமுள்ள திமுகவினர் வாங்கவே கூடாது என திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியதாக பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று முகநூலில் பரவி வருகிறது.
Facebook post link | archived link
அமாவாச – Naga Raja Chozhan MA என்ற முகநூல் பக்கத்தில் வெளியான பாலிமர் நியூஸ் கார்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. மேலும், பல முகநூல் கணக்குகளில் பதிவிட்டு கிண்டல் செய்தும் வருகின்றனர்.
உண்மை என்ன ?
தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்திற்கு திமுக கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பே தெரிவித்தாலும், வெளிப்படையாக கட்சியை சேர்ந்தவர்கள் வாங்கக் கூடாது என கூறுவது வாய்ப்பில்லை எனக் கூறலாம். ஏனெனில், பல ஆண்டுகளாகவே பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஸ்டாலின் தன் தொண்டர்களுக்கு அப்படி ஏதும் கட்டளை விதித்ததாகவோ அல்லது பேசியதாகவோ எங்கும் செய்திகள் இல்லை.
மேலும், வைரல் செய்யப்படும் பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டு குறித்து செய்தி தேடிய பொழுது, சமீபத்தில் வெளியான பாலிமர் செய்திகளில் மேற்காணும் நியூஸ் கார்டு போன்று எந்த செய்தியும் வெளியாகவில்லை.
பிப்ரவரி 2019-ல் வெளியான செய்திகளில், தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்குதலின் போது பொங்கல் பரிசுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தி இல்லை என திமுக கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏக்கள், பொங்கல் பரிசுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
டிசம்பர் 1-ம் தேதி வெளியான செய்தியில் , ” ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்காதது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாக “கூறியுள்ளனர்.
இதைத் தவிர, பொங்கல் பரிசை வாங்கக் கூடாது என கூறியதாக செய்திகள் இல்லை. ஆக, கிடைத்த தகவலில் இருந்து வைரல் செய்யப்படுபவை தவறாக ஃபோட்டோஷாப் செய்த நியூஸ் கார்டு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.