This article is from May 18, 2021

ஆவி பிடித்தால் கொரோனாவை தடுத்திடலாம் என பரவும் கோவை கே.ஜி மருத்துவமனை கடிதம்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் சார்பில் மற்றும் மருத்துவமனைகளில் ஆவி பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதற்காக அங்கு கூட்டம் கூடவே இது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் என கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, பொது இடங்களில் இப்படி ஆவி பிடிப்பது சரியல்ல, அது பரவலை அதிகரிக்கும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இப்படி பொது இடங்களில் ஆவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக கோவை கே.ஜி மருத்துவமனையின் பெயரில் உள்ள கடிதத்தில், ” கோயம்புத்தூர் நகரில் அடுத்த 10 நாட்களுக்கு நீராவி உள்ளிழுத்தல்(ஆவி பிடித்தல்) பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு ” அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இக்கடிதம் மருத்துவர் பக்தவத்சலம் பெயரில் வெளியாகியதாக இடம்பெற்று இருக்கிறது.

பொது இடங்களில் கூட்டமாய் ஆவி பிடித்தல் செயலில் ஈடுபட வேண்டாம் என அரசு தரப்பிலும், மருத்துவர்கள் தரப்பிலும் எச்சரிக்கை விதித்து வருகிறார்கள். இந்நிலையில், இக்கடிதத்தை காண்பித்து கோவையின் பெரிய மருத்துவமனையே ஆவி பிடித்தலை செய்யுமாறு கூறுகிறது என்றும், இது உண்மையில் கே.ஜி மருத்துவமனை வெளியிட்ட கடிதமா என்றும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் கே.ஜி மருத்துவமனை கடிதம் யாருக்கு அனுப்பப்பட்டது, தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லை. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களிலும் இக்கடிதம் வெளியாகவில்லை.

இக்கடிதத்தில் கொரோனா வைரசிற்கு ஆவி பிடித்தல் குறித்து குறிப்பிட்டுள்ள ஆய்வு இணைப்பை தேடிப் பார்க்கையில், ” Steam Inhalations in COVID-19 Patients (Steam-COVID) ” எனும் தலைப்பிலான ஆய்வு 2021 ஜனவரியில் தொடங்கி இருக்கிறது. எனினும், அந்த ஆய்வானது அக்டோபர் மாதம் தான் முடியுமென தோராயமாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆக, இந்த ஆய்வே இன்னும் முடியவில்லை.

இதுகுறித்து மருத்துவர் பிரவீன் அவர்களிடம் கேட்கையில், ” இந்த ஆய்வு சமீபத்தில் தொடங்கிய இன்னும் முடிக்கப்படாத ஒன்று. ஆகையால், இதைப் பற்றி கருத்துக் கூற முடியாது. எனினும், நீராவி கொரோனா வைரஸை கொல்லும் என எந்த ஆதாரமும் இல்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, யூடர்ன் தரப்பில் கே.ஜி மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு பேசுகையில், ” நாங்கள் அப்படி எந்த பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவில்லை. அப்படி பரவும் தகவலில் உண்மையில்லை ” என மறுத்து உடனே அழைப்பை துண்டித்து விட்டனர். மேற்கொண்டு எந்த தகவலையும் வழங்கவில்லை.

கே.ஜி மருத்துவமனையின் பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்கையில், ” இக்கடிதம் போலி செய்தி ” என பதில் அளித்து இருந்தார்.

மேலும் படிக்க : ஆவி பிடித்தல், கிராம்பை வாயில் வைத்திருத்தல் கொரோனாவை அழிக்குமா ?

இதற்கு முன்பாக, ஆவி பிடித்தல் மூலம் கொரோனாவை ஒழிக்கலாம் என சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவல் குறித்து நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

கொரோனா தொற்று இந்தியாவிற்கு வந்தது முதல் ஆவி பிடிப்பது, சில மூலிகை பொருட்களை போட்டு ஆவி பிடிப்பதன் மூலம் கொரோனாவை அழிக்க முடியும் என ஆதாரமற்ற பல ஃபார்வர்டு செய்திகள் சமூக வலைதளங்களில் சுற்றி வந்துக் கொண்டே இருக்கின்றன. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

முடிவு :

நம் தேடலில், கே.ஜி மருத்துவமனை தங்களை பற்றி சமூக வலைதளங்களில் பரவும் தகவலை மறுத்து இருக்கிறார்கள்.

இக்கடிதத்தில் குறிப்பிட்டு உள்ள ஆய்வு இன்னும் முடியக்கூடவில்லை என தெளிவாய் தெரிகிறது. இவற்றை நம்பி பொது இடங்களில் ஆவி பிடிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம், அது மேலும் கொரோனா பரவலை அதிகரிக்கும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




Back to top button
loader