ரஜினியை யார் எனக் கேட்ட இளைஞர் பைக் திருட்டில் கைதா ?

பரவிய செய்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை பார்க்க வந்த ரஜினியை யார் எனக் கேட்ட போராளி பைக்கை திருடி கைது.

மதிப்பீடு

விளக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயமடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்க்க சென்ற பொழுது சந்தோஷ் எனும் இளைஞர் ” நீங்கள் யார் ” என ரஜினியை பார்த்து கேட்ட சம்பவம் பெரிய அளவில் வைரலாகியது. அந்த இளைஞர் தற்பொழுது பைக் திருட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதை காண நேரிட்டது. சில செய்திகளில் இளைஞர் சந்தோஷ் பைக்கை திருடியதாக வெளியாகி இருக்கிறது.

Advertisement

Video link | archived  link 

பாலிமர் செய்தியில் ” ஸ்டெர்லைட் போராளி பைக் திருட்டில் கைது ” என சந்தோஷ் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக சித்தரிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு இருந்தனர். செய்தியில் முரண்பாடுகள் இருப்பதால் சம்பவம் குறித்து விரிவாக அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஷியாம்குமார் என்ற இளைஞர் தன்னுடைய யமஹா ஆர்.ஒன் 5 பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அதனை தூத்துக்குடியை சேர்ந்த சரவணன், விஜி என்ற இரு திருடர்கள் திருடி விற்பனை செய்துள்ளனர்.

பைக் விற்பனை செய்வதை அறிந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் மணி ஆகிய இருவரும் 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பைக்கை ஆர்.சி புக் இல்லாமல் வெறும் 17 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கியுள்ளனர். தன்னுடைய பைக் திருடப்பட்டது குறித்து ஷியாம்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பைக்கை விற்ற திருடர்கள் மற்றும் விலைக்கு வாங்கிய சந்தோஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

Advertisement

திருட்டு பைக்கினை OLX-ல் வாங்கியதாகவும், மெக்கானிக் மூலம் வாங்கியதாகவும் இரு வேறு செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இளைஞர் சந்தோஷ் பைக்கை பணம் கொடுத்து வாங்கியுள்ளார் என்றே கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட வடபாகம் போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய பொழுது,

” பைக் திருட்டு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் உள்ளனர். கைதானவர்களில் சந்தோஷ் என்பவரும் ஒருவர். ஆர்.சி புக் இல்லாமல் பைக்கை குறைந்த விலை கொடுத்து வாங்கியுள்ளார். பைக்கை எப்படி விற்பனை செய்தார்கள் என தெரியவில்லை. ஆனால், பைக்கை திருடிய திருடர்கள் இருவருடன் விலைக்கு வாங்கிய சந்தோஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார் ” எனக் கூறி இருந்தனர்.

பாலிமர் செய்தியில் ரஜினியை யார் எனக் கேட்ட இளைஞர் தனது இரு நண்பர்களுடன் பைக் திருட்டில் ஈடுபட்டு வருவதாக மிகைப்படுத்தி சித்தரித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். ஆனால் கிடைத்த தகவலின்படி, இளைஞர் சந்தோஷ் திருட்டு பைக்கை குறைந்த விலை கொடுத்து வாங்கியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. ஆகையால், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடபாகம் போலீஸ் நமக்கு அளித்த தகவலை அளித்துள்ளோம். எனினும், இளைஞர் சந்தோஷ் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் இருப்பதால் அவர் தரப்பு தகவல்களை அளிக்க முடியவில்லை என்பதையும் பதிவு செய்கிறோம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button