சீனாவின் மலையில் இருந்து வந்ததாகக் கூறும் மர்மமான ஒலியின் பின்னணி என்ன ?

பரவிய செய்தி
சீனாவின் குய்சோ மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக வெளி வரும் மர்மமான சத்தம்.
மதிப்பீடு
விளக்கம்
சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் மர்மமான சத்தம் வெளிவருவதாகவும், அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என அங்குள்ள மக்கள் தேடியும் கண்டறியமுடியவில்லை, சிலர் இதை பூமியில் இருக்கும் ட்ராகன் என்றும் கீழ்க்காணும் 3 நிமிட வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் இவ்வீடியோ வைரலாகி வருகிறது.
மேற்காணும் வீடியோவில், திரைப்படங்களில் வரும் மர்ம காட்சிகளின் சத்தங்கள் எல்லாம் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோ குறித்து சில கீ வார்த்தைகளைக் கொண்டு தேடுகையில்,ஜூன் 20-ம் தேதி ” ” தி சயின்ஸ் டைம்ஸ் ” எனும் இணையதளத்தில் சீனாவின் குய்சோ பகுதியில் உள்ள கிராமத்தில் இருக்கும் மக்கள் மலையில் இருந்து வந்த மர்மமான சத்தத்தை கேட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இது ஒவ்வொரு ஆறு மற்றும் ஏழு நிமிடங்களுக்கு இரண்டு அல்லது மூன்று முறை மீண்டும் மீண்டும் ஒழித்தது. அந்த ஒலி மிகவும் ஆழமாக இருந்தது மற்றும் மிகவும் விசித்திரமானது என நினைத்தேன் என்று அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்து உள்ளதாகவும் இடம்பெற்று உள்ளது.
மர்ம ஒலி என இவ்வீடியோக்கள் சீனாவின் ஊடகங்களில் கூட வெளியாகி வைரலான பிறகு குய்சோவின் வனவிலங்கு நிர்வாகத்தின் இயக்குனர் மற்றும் அவரின் குழு அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இது குறித்து விலங்கியல் வல்லுநர்கள் கூறுகையில், பட்டன்குயில் எனும் மஞ்சள் கால்களைக் கொண்ட சிறிய வகை பறவையில் இருந்தே மர்மமான ஒலி வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது குருவியை விட பெரிதாகவும், கொஞ்சம் அதிகமாக சத்தத்தை எழுப்பும் எனக் கூறுகின்றனர். பட்டன்குயில் எனும் பறவை எழுப்பிய ஒலியே அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பறவைகளின் இனப்பெருக்க காலத்தில் பெண் பட்டன்குயில் பறவைகள் எழுப்பும் ஒலியை 100 மீட்டர் தொலைவில் இருந்தாலும் கேட்க முடியும் என்கிறார்கள். இணையத்தில் வைரலாகிய வீடியோவில் சில கூடுதல் சவுண்ட் எஃபெக்ட்களை இணைத்து ட்ராகன் என்றெல்லாம் தவறாக வைரல் செய்து இருக்கிறார்கள்.
மலைப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து ட்ராகன் இருப்பதாக ஆன்லைனில் வதந்திகளைப் பரப்பிய சிலரை உள்ளூர் காவல்துறை கைது செய்து உள்ளதாக டெய்லி மெயில் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், ” குய்சோ மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக வெளி வரும் மர்மமான சத்தம் என வைரலான வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும்,அங்குள்ள பட்டன்குயில் எனும் பறவை எழுப்பிய ஒலியே மக்களிடம் குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.