சிறுவன் அப்துல்கலாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் எனப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
கடைசில நம்ம அப்துல்கலாம் தம்பி.. ஜூனியர் ஆர்டிஸ்ட்டாம். ஹே சினாமிக படத்துல வறாராம்..
மதிப்பீடு
விளக்கம்
வடசென்னை பகுதியில் யூடியூப் சேனல் ஒன்று எடுத்து மக்கள் பேட்டியில், ” யாரையும் வெறுக்க கூடாது, அனைவர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் ” என பேசிய சிறுவன் அப்துல்கலாம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்றார்.
சிறுவனின் பேச்சால் வாடகை வீட்டை காலி செய்ய சொல்வதாக பெற்றோர் அளித்த பேட்டி வைரலாகியது. இதன் காரணமாக, முதல்வர் ஸ்டாலினும் சிறுவன் அப்துல் கலாமை நேரில் வரவழைத்து பாராட்டினார். அவர்களுக்கு அரசு தரப்பில் வீடு ஒதுக்கப்பட்ட ஆணையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஹே சினமிகா எனும் திரைபடத்தில் சிறுவன் அப்துல் கலாம் வருவதாகவும், அவர் ஜூனியர் ஆர்டிஸ்ட் என்றும் திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
சிறுவன் அப்துல்கலாம் வைரலாக காரணமான வீடியோவை எடுத்த Asiaville Tamil யூடியூப் சேனல் ஊழியரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, ” சிறுவனின் வைரல் வீடியோ சென்னை கண்ணகி நகரில் எடுக்கப்பட்டது. அந்த பகுதியில் காணப்பட்ட பல்வேறு தரப்பு மக்களை பேட்டி எடுக்கும் போது பேசியதே சிறுவன் அப்துல் கலாம். வைரலான வீடியோ மற்றும் அதன் பிறகு அவர்களது பெற்றோரை சந்தித்த இரு வீடியோக்களை மட்டுமே நான் எடுத்தேன். நான் இன்னும் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
துல்கர் சல்மான் நடிப்பில் நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ள ஹே சினமிகா திரைப்படத்தை பார்க்கையில், ” அச்சமில்லை ” எனும் பாடலின் போது கடற்கரையோரத்தில் வைக்கப்பட்ட படகில் சிறுவர்கள் பலர் அமர்ந்தபடி இருக்கும் காட்சியில் சிறுவன் அப்துல்கலாம் இடம்பெற்று இருப்பார். அதுவும் சில நொடிகள் மட்டுமே காணப்படுவார்.
பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் ” அச்சமில்லை ” எனும் பாடலை படமாக்கப்பட்ட போது அப்பகுதியில் வசித்த பல சிறுவர், சிறுமிகளை பாடலில் காண்பித்து இருக்கிறார்கள். கீழ்காணும் வீடியோவில் அச்சமில்லை பாடல் எடுக்கப்பட்ட விதம் காட்சிகள் இடம்பெற்று இருக்கும். அதில், குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் பலரையும் வெவ்வேறு ஃபிரேம்களில் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
இதுமட்டுமின்றி, என் மகன் ஜூனியர் ஆர்டிஸ்ட் எனப் பரப்பப்படும் தகவல் பொய்யானது என சிறுவன் அப்துல்கலாம் தந்தை மறுத்துள்ளனர்.
சிறுவன் அப்துல்கலாமும், ” நான் நடிச்சதே இல்லை. என் பாட்டி வீடு இருக்கும் பட்டினம்பாக்கத்தின் பீச் பகுதியில் சூட்டிங் நடக்கும்போது வேடிக்கை பார்க்க நண்பர்களுடன் போனேன். யாரெல்லாம் உட்காறீகளோ வாங்கனு சொன்னாக நான் படகில் போய் அமர்ந்து கொண்டேன். அந்த படத்தின் பெயர் கூட தெரியாது, நான் ஏதோ விளம்பரம் எடுக்குறாங்கனு நினைச்சேன் ” என யூடியூப் சேனல் ஒன்றிக்கு தெரிவித்து இருக்கிறார்.
தாங்கள் வசிக்கும் பகுதியில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் சிறுவர்களோடு சிறுவர்களாக வைரலான அப்துல் கலாம் சிறுவனும் அமர்ந்து இருக்கிறார். அதும் ஒரு காட்சியில் சில நொடிகள். இப்படி இருக்கையில், சிறுவன் அப்துல் கலாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் என்றும், திரைப்படத்தில் நடிக்கும் சிறுவனை வைத்து போலியாக எடுக்கப்பட்ட வீடியோ என்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், சிறுவன் அப்துல்கலாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் எனப் பரப்பப்படும் தகவல் வதந்தியே என அறிய முடிகிறது.