பள்ளிக்கு 3 நாட்கள் வந்தால் கூட தேர்வு எழுத அனுமதி.. அமைச்சரின் இடைநிற்றல் குறித்த பேச்சைத் தவறாக வெளியிட்ட தந்தி !

பரவிய செய்தி

ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி – பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவிப்பு.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ள்ளி மாணவர்கள் ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும் கூட பொதுத் தேர்வு எழுத அனுமதி எனப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு என தந்தி தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டது. இதை விமர்சித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பதிவிட்டு வந்தனர்.

உண்மை என்ன ? 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த திங்கள் (13.03.2023) தொடங்கியது. முதல் நாள் மொழிப்பாடங்களுக்கான தேர்வில் தமிழ்நாடு முழுவதும் 49,559 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. குறிப்பாக கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு கல்லூரி நிகழ்ச்சியின் போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் புதுவகை வைரசினால் தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை இறுதித் தேர்வுகள் முன்னதாக நடத்தப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பின் அமைச்சர் பேசுகையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஏன் இவ்வளவு மாணவர்கள் வரவில்லை அதற்கான காரணங்கள், இந்த மாணவர்களை எவ்வாறு மீதியுள்ள தேர்வுகளை எழுத வைப்பது என்பது குறித்தும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக தற்பொழுது கூட்டம் நடக்க உள்ளது எனப் பேசியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கொரோனா காலக்கட்டத்திற்கு பின் 2021- 22 கல்வியாண்டில் கிட்டத்தட்ட 1,90,000 இடைநின்ற மாணவ மாணவிகளை கண்டெடுத்து மீண்டும் பள்ளிகளில் சேர்த்துள்ளோம். இடைநின்றலில் கண்டெடுக்கப்பட்ட சில மாணவர் மாணவியர் 2022-23  கல்வியாண்டில் பள்ளிக்கு நான்கு முதல் ஐந்து  நாட்கள் மட்டுமே வந்துள்ளனர், இருந்தாலும்  வருகை பதிவேடு குறைபாடு உள்ள மாணவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதி தருமாறு சொல்லி உள்ளோம், ஏனென்றால் அவர்களை தேர்வெழுத தடை செய்தால் மீண்டும் அவர்கள் பள்ளிக்கு வரவே மாட்டார்கள், மேலும் அந்த மாணவர்களுக்கு தேர்வு குறித்த பயமா அல்லது  ஏதாவது சமூக பொருளாதார சிக்கல் உள்ளதா என்பது குறித்து ஆராயுள்ளோம் எனக் கூறியிருந்தார்.

16 ஆம் தேதி நடந்த மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நிருபர் பொதுத்தேர்வு எழுத வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 75% வருகை பதிவேடு வேண்டும் என அரசாணை உள்ளது, ஆனால் பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு எவ்வாறு அனுமதிச்சீட்டு தர முடியும் என கேட்ட கேள்விக்கு இடைநின்ற மாணவர்கள் மூன்று அல்லது நான்கு நாள்கள் மட்டும் பள்ளிக்கு வந்தார்கள் என அந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றால் அவர்கள் பள்ளி சூழ்நிலைக்கே வர மாட்டார்கள். இடைநின்ற மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், பள்ளிக்கு வர செய்ய தான் இதை செய்துள்ளோம் என பதில் அளித்தார்.

மேலும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் குறித்து தேடிய போது பிப்ரவரி 23ஆம் தேதி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரையில், தமிழகம் முழுவதும் 1,38,821 மாணவ மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை எடுத்த சர்வே மூலம் தெரிய வந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், பள்ளி மாணவர்கள் ஆண்டுக்கு மூன்று நாட்கள் வருகை தந்தால் கூட பொதுத்தேர்விற்கு அனுமதி என புதிய மாற்றம் கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவும் செய்தி தவறானது.

அவர் இடைநின்ற மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கியதைத்தான் அவ்வாறு சொன்னார். மேலும் அவர் அதை அரசாணை எனக் குறிப்பிடவில்லை, இடைநின்ற மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும், அவர்கள் தேர்வு எழுத வேண்டும் எனும் நோக்கத்தில் அவர் சொன்னதாக அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader