பரமக்குடியில் காலை உணவு சாப்பிட்டதால் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனப் பரவும் தவறான செய்தி !

பரவிய செய்தி
காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த 25 மாணவர்கள் பரமக்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதி இராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு..! காலை உணவுத் திட்டத்தால் மருத்துவமனையும் நிரம்பி வழிகிறது.. இப்ப என்ன சொல்வீங்க முதல்வரே.?
மதிப்பீடு
விளக்கம்
சட்டமன்றத்தில் கடந்த 2022 மே 08 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காலை உணவுத் திட்டம் தொடர்பான முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நோக்கில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்களுக்கு இந்த காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்த தமிழக அரசு , கடந்த ஆகஸ்ட் 25 முதல் செயல்படுத்தியும் வருகிறது.
இந்நிலையில், தற்போது பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட, பரமக்குடி அருகே உள்ள மீனங்குடி கிராமத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள், பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த 25 மாணவர்கள் பரமக்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதி
இராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு..!காலை உணவுத் திட்டத்தால் மருத்துவ மனையும் நிரம்பி வழிகிறது..
இப்ப என்ன சொல்வீங்க முதல்வரே.?@annamalai_k @BJP4TamilNadu @RaArjunamurthy pic.twitter.com/uvKVRILMNo
— Anantha Krishnan (@Ananthkrisnan) September 1, 2023
காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த 25 மாணவர்கள் பரமக்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதி
இராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு..!காலை உணவுத் திட்டத்தால் மருத்துவ மனையும் நிரம்பி வழிகிறது..
இப்ப என்ன சொல்வீங்க #Loser_Stalin ? pic.twitter.com/InBlsH8LDo
— G MURUGAN 🇮🇳 (@Murugan_G12) August 31, 2023
மேலும் பரவி வரும் அப்பதிவுகளில், தினமலரை போன்றே இவர்களும், ‘காலை உணவுத் திட்டத்தால் மருத்துவமனையும் நிரம்பி வழிகிறது‘ என்று விமர்ச்சித்து எழுதியுள்ளதையும் காண முடிந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மைக் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அந்த மாணவர்கள் பள்ளியில் காலை உணவு அருந்தியதால் மயக்கம் அடையவில்லை என்பதையும், தனியார் பள்ளியில் படிக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்ற மாணவர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் பரவி பதிவுகளில் இடம்பெற்றுள்ள புகைப்படம் 2023 பிப்ரவரி 03 அன்று எடுக்கப்பட்ட பழையப் புகைப்படம். இதனை, ‘பரமக்குடி பள்ளியில் மதிய உணவில் வழங்கப்பட்ட முட்டை கெட்டுப் போயிருந்ததால் மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது’ குறித்து சமயம் ஊடகம் தன்னுடைய கட்டுரையில் பதிவிட்டிருந்தது.
சமீபத்திய செய்தி குறித்து தேடியதில், “தண்ணீர் குடித்து உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்” என்ற தலைப்பில் நேற்று (செப்டம்பர் 01) மாலை மலர் வெளியிட்டிருந்த செய்தியைக் காண முடிந்தது. அதில், “பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடி பஞ்சாயத்தில் மீனங்குடி கிராமம் உள்ளது. கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக நீர் தேக்க தொட்டி உள்ளது.
நேற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில் அதனை குடித்த பள்ளி மாணவ மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் மயக்கமடைந்த மாணவ மாணவிகளை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று The News Lite வெளியிட்டுள்ள செய்தியிலும், “மீனங்குடியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று எஸ்.அண்டக்குடி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட பின்பு தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த குடிநீரை அருந்தி உள்ளனர். உடனடியாக வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பரமக்குடியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மீனங்குடி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 9 மாணவர்கள், 7 மாணவிகள் என 16 பேர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த பள்ளி மாணவ மாணவிகளை பரமக்குடி உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல் நலம் விசாரித்தார்.” என்றுள்ளது.
மேலும் படிக்க: காலை உணவு திட்டம் : அருவருப்பு தலைப்பால் எழுந்த கண்டனங்கள்.. தினமலருக்கு பதில் இதோ !
முடிவு:
நம் தேடலில், பரமக்குடி அருகே காலை உணவு சாப்பிட்டதால் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனப் பரவிவரும் செய்திகள் தவறானவை. மீனங்குடி கிராமத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்து அருந்திய குடிநீரால் மயக்கமடைந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.