படத்தில் இருப்பது சுப்ரமணியசுவாமியின் மகள் & பேரக் குழந்தையா ?

பரவிய செய்தி
உம்ரா எனும் மெக்கா பயணத்திற்கு தன் பெண்ணை வழி அனுப்ப வந்த சுப்ரமணியசுவாமி அவர்கள். கூடிய சீக்கிரம் அவரையும் உம்ரா, ஹஜ் போன்ற காரியங்களுக்கு ஏக இறைவன் அழைப்பான்.
மதிப்பீடு
விளக்கம்
பாஜகவின் மூத்தத் தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியசுவாமி மகள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருந்த போது வழி அனுப்ப வந்ததாக ஹிந்தி மொழியில் இப்படம் வைரல் ஆகி ஆயிரக்கணக்கான லைக், ஷேர்களையும் பெற்றது.
இதே படம் தமிழில் மொழி மாற்றப்பட்டு பதிவிடப்படுகிறது. சுப்ரமணியசுவாமி உடன் இருப்பவர் அவரின் மகளா என கேள்விகளும் எழுகிறது.
இப்புகைப்படம் எங்கு எப்பொழுது எடுக்கப்பட்டது என கூகுள் தளத்தில் தேடுகையில், இப்படத்தை எடுத்தவரும், பதிவிட்டவருமான ஜகதீஷ் ஷெட்டி என்பவரின் ட்விட்டர் பதிவைக் காண முடிந்தது.
“ பெங்களூர் ஏர்போர்ட்டில் முஸ்லீம் பெண்கள் சுப்பிரமணியசுவாமி உடன் புகைப்படம் எடுத்துள்ளனர். முத்தலாக் தடை செய்ய மேற்கொண்ட முயற்சியில் முக்கிய பங்கு மற்றும் குரல் எழுப்பியதற்காக அவரை பாராட்டி புகைப்படங்கள் எடுத்துள்ளனர் “ என ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
மே 4 2018-ல் கர்நாடகாவின் பெங்களூர் விமான நிலையத்தில் புகைப்படத்தை எடுத்ததாக ஜகதீஷ் ஷெட்டி ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். அன்றைய தினத்திற்கு கர்நாடகா தேர்தல் சம்பந்தமாக பெங்களூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று உள்ளார்.
பரவியப் படத்தில் இருப்பது சுப்ரமணியம் சுவாமியின் மகள் மற்றும் பேரக் குழந்தைகள் இல்லை என்பதே உண்மை. விமான நிலையத்தில் அவரைக் கண்ட முஸ்லீம் பெண்கள் அவருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதை தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமியின் மகள் முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார். எனினும், அவர் மதம் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.