சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்தினால் புற்றுநோய் செல்கள் இறக்குமா ?

பரவிய செய்தி
புற்றுநோய் ஒரு நோயல்ல ! டாக்டர் குப்தா கூறுகையில், சிகிச்சை பெறாததைத் தவிர்த்து புற்றுநோயால் யாரும் இறக்கவில்லை. (1) முதலில் சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும் உடலில் சர்க்கரை இல்லாத பொழுது புற்றுநோய் செல்கள் இயற்கையாகவே இறந்து விடுகின்றன. (2) இரண்டாவதாக, எலுமிச்சைப் பழம் மற்றும் ஒரு கப் சூடான நீரை கலந்து 1 முதல் 3 மாதங்களுக்கு அருந்தவும். குறிப்பாக, உணவு உண்பதற்கு முன்பாக அருந்த வேண்டும். இதனால் புற்றுநோய் மறைந்து விடும். மேரிலாண்ட் ஸ்கூல் ஆப் மெடிசன் உடைய ஆராய்ச்சியின்படி கூறுகையில், இது சீமோதெரபியை விட 1000 மடங்கு சிறந்தது என கூறப்பட்டுள்ளது. (3) மூன்றாவதாக, 3 டேபிள்ஸ்பூன் இயற்கையான தேங்காய் எண்ணெய்யை காலை மற்றும் இரவு அருந்துவதன் மூலம் புற்றுநோய் மறைந்து விடும். சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு ஏதாவதொரு சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். இந்த தகவலை நான் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பகிர்ந்து வருகிறேன்.
மதிப்பீடு
விளக்கம்
இணையத்தில் நோய்களுக்கான மருத்துவம் குறித்த குறிப்புகள், ஃபார்வர்டு செய்திகள் நிறைந்து இருக்கின்றன. மருத்துவர் கூறியதாக பரவி வரும் செய்திகளில் இருக்கும் நம்பகத்தன்மை குறித்து பெரிதாக யாரும் யோசிக்காமல் பகிர்ந்து விடுகின்றனர்.
குறிப்பாக, புற்றுநோய் குறித்த அறிவுரைகள், வீட்டு மருத்துவத்தை இணையத்தில் அதிகம் பார்க்கலாம். அவற்றை தொடர்ந்து மருத்துவர் குப்தா என்பவர் புற்றுநோய் ஒரு நோயல்ல, உடலில் இருந்து சர்க்கரையை நீக்குவதன் மூலம் புற்றுநோய் செல்கள் இறந்து விடும் என கூறியதாக மருத்துவ குறிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
புற்றுநோய் குணப்படுத்தும் மருத்துவக் குறிப்பின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்த பொழுது, முதலில் மருத்துவர் குப்தா குறித்து தேடினோம். இணையத் தேடலில் இந்த ஃபார்வர்டு செய்தி மட்டுமே மருத்துவர் குப்தர் கூறியதாக காண்பிக்கின்றன.
வாட்ஸ் ஆப் ஃ பார்வர்டு செய்தியில் மருத்துவர்களில் ஒருவராக ” Dr. Guruprasad Reddy BV from Osh State Medical University in Russia ” என குறிப்பிட்டு இருந்தனர். Osh State Medical University உடைய இணையதளம் சென்று பார்க்கையில், பல்கலைக்கழகமானது ரஷ்யாவில் இல்லை, Kyrgyz Republic (Kyrgyzstan)-ல் இருப்பதை அறிய முடிந்தது.
மருத்துவத் தகவல் :
இது குறித்து புற்றுநோய் மருத்துவர் சித்தார்த் சாஹ்னி எஃப்.ஐ.டி-க்கு அளித்த பதிலில், ” சர்க்கரையை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதால் புற்றுநோய் அல்லது எந்தவொரு நோயையும் தடுக்க இயலாது, ஆனால் மிகப்பெரிய ஆபத்து காரணிகளை குறைக்கச் செய்யும். பொதுவாக, சர்க்கரை என்றாலே வெள்ளை சர்க்கரை என்றே நினைக்கின்றனர், ஆனால் இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் ஃப்ருக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் பற்றி அறிவதில்லை ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
Cancer Research UK , சர்க்கரையை முழுவதுமாக நீக்க வேண்டும் என்ற கூற்றை மறுத்து உள்ளது மற்றும் இதனால் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்வதால் உடல் நலமானது பாதிக்கப்படும் என அறிவித்து உள்ளது. நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஆற்றலின் வடிவமாக சர்க்கரை உள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். அதனை நீக்குவதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பில்லை என கூறப்பட்டு உள்ளது.
சூடான எலுமிச்சை பானம் புற்றுநோயை குணப்படுத்துமா ?
சூடான நீருடன் எலுமிச்சைச் சாறை கலந்து அருந்துவதால் உடலுக்கு பல நன்மைகள் இருப்பதாய் மருத்துவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், சூடான எலுமிச்சை சாறு பானத்தால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என எந்தவொரு மருத்துவ ஆராய்ச்சியும் நிரூபிக்கவில்லை.
இதற்கு முன்பாக ” எலுமிச்சை புற்றுநோயைக் குணப்படுத்துமா ? ” என்ற தலைப்பில் புற்றுநோயை எலுமிச்சை சாறு குணப்படுத்தும், அது சீமோதெரபியை விட 1000 மடங்கு சிறந்தது என்ற செய்தியை தவறான தகவல் என நிரூபித்து இருந்தோம்.
விரிவாக படிக்க : எலுமிச்சை புற்றுநோயைக் குணப்படுத்துமா ?
தேங்காய் எண்ணெய் :
” தேங்காய் நீருடன் மஞ்சள் மற்றும் மிளகு கலந்து அருந்துவதன் மூலம் குடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் குடலில் உண்டாகும் நோய்களை தடுக்கலாம். தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது. ஆனால், புற்றுநோயை தடுக்காது ” என மருத்துவர் சித்தார்த் சாஹ்னி தெரிவித்து இருந்தார்.
முடிவு :
புற்றுநோயை குணப்படுத்தும் எளிய சிகிச்சைமுறை பரவிய ஃபார்வர்டு தகவலில் இருக்கும் குறிப்புகள் மூலம் புற்றுநோயை குணப்படுத்த வாய்ப்பில்லை என்பதை மருத்துவரின் பதில்கள், கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அறிந்து இருப்பீர்கள். மருத்துவம் சார்ந்த ஃபார்வர்டு செய்திகள் அனைத்தையும் உண்மை என நினைக்காமல், குறைந்தபட்சம் மருந்துவர்களிடம் ஆலோசனை பெற்று அதன்படி நடந்து கொள்வதே சிறந்தது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.