தெர்மாகோல் வைத்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை பிடிபட்டதாகப் பரப்பப்படும் வதந்தி வீடியோ !

பரவிய செய்தி
தெர்மாகோல் வைத்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை பிடிபட்டுள்ளது.. எதைதான் நம்பி சாப்பிடுவது..
மதிப்பீடு
விளக்கம்
பொதுவாக அனைத்து விதமான நுகர்வோர் பொருட்களின் பேக்கேஜ்-ம் அதன் பாதுகாப்பு கருதி தெர்மாகோல் கொண்டே செய்யப்படுகின்றன. இதனால் உலகில் உள்ள பெரும் நகரங்கள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் தெர்மாகோல் கழிவுகளை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது தெர்மாகோல் கொண்டு ஒரு இயந்திர ஆலையில் சர்க்கரை தயாரிக்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது.
தெர்மாகோல் வைத்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை பிடிபட்டுள்ளது 😱 எதைதான் நம்பி சாப்பிடுவது 🤷🏻♂️ pic.twitter.com/GOp8LNRqbN
— [[[[(பாசமலர்)]]]] (@nraja2019) May 5, 2023
பரப்பப்படும் வீடியோவில், ஒரு கிரஷர் உதவியுடன் தெர்மாகோல் சிறிய துண்டுகளாக உடைக்கப்படுவதிலிருந்து, இறுதியாக வெள்ளை துகள்களாக மாற்றப்படுவது வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பகிரப்படும் வீடியோக்களில் “தெர்மாகோல் மூலம் சர்க்கரை தயாரிக்கும் ஆலை பிடிபட்டுள்ளது. எதைதான் நம்பி சாப்பிடுவது ? நாட்டு சக்கரை உபயோகப்படுத்துங்கள்..” என்பது போல பதிவிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளன.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், 2021 டிசம்பர் 25 அன்று இந்த வீடியோ Meh Chauhan என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டிருப்பது தெரிந்தது. அதில் வீடியோவின் தலைப்பு “Thermocol recycling plant” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இது தெர்மாகோலை மறுசுழற்சி செய்யும் ஆலை தொடர்பான வீடியோ என்பதை அறிய முடிந்தது.
மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோவைப் போன்றே Entrepreneur India TV வெளியிட்டுள்ள வீடியோவிலும் தெர்மாகோல் கொண்டு மறுசுழற்சி செய்யும் ஆலையின் செயல்முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
இதில் தெர்மாகோல் மறுசுழற்சி தொழில் எவ்வாறு தொடங்க வேண்டும் என்பதில் இருந்து, அதற்கு தேவையான இயந்திரங்கள், மறுசுழற்சி செய்யும் முறைகள், அத்தொழிலில் கிடைக்கும் லாபங்கள் என இது தொடர்பான அனைத்தும் விளக்கமாகப் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே முதலில் தெர்மாகோல் கழிவுகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு, அதிலிருந்து காகிதம், டேப், ஸ்டிக்கர் போன்ற தேவையில்லாத பொருட்கள் பிரிக்கப்படுகின்றன. பின்னர் அவை ஒரு கிரஷர் உதவியுடன் சிறிய துண்டுகளாக உடைக்கப்பட்டு, திரவ நிலைக்கு கெட்டியான பசை போன்று உருக்கப்படுகிறது.
இதற்குப் பிறகு, இவை நீண்ட இழைகளாக மாற்றப்பட்டு, கண்ணாடி துகள்களைப் போன்று சிறியதாக வெட்டப்படுகின்றன. இப்போது இந்த துகள்கள் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பைகளில் நிரப்பப்பட்டு சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. இவை அனைத்தையும் Karobar Tips எனும் வலைதளம் வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
இதற்கு முன்பாகவும், இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை மற்றும் முட்டைகள் விற்பதாக வாட்ஸ் அப் தகவல்கள் பரவி வந்தன. இதற்கு 2018 ஜனவரி 9 அன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் மறுப்பு தெரிவித்த நுகர்வோர் விவகாரங்களுக்கான ஒன்றிய இணை அமைச்சர் சி.ஆர்.சௌத்ரி, இது தொடர்பாக எந்த வழக்குகளும் இதுவரை பதிவாகவில்லை எனத் தெரியப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்தினால் புற்றுநோய் செல்கள் இறக்குமா ?
இதற்கு முன்பாக, வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவது தொடர்பாகவும் யூடர்ன் தன்னுடைய தளத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
முடிவு:
நம் தேடலில், தெர்மாகோல் வைத்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை பிடிபட்டுள்ளது என சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ தவறானது. இவை தெர்மாகோலை மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் துகள்கள் தயாரிக்கும் இயந்திர ஆலைகளே தவிர சர்க்கரை தயாரிக்கும் இயந்திர ஆலைகள் அல்ல என்பதை அறிய முடிகிறது.