குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு 11 கோடி செலவானதா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
குழந்தை சுர்ஜித் வில்சன் மீட்பு பணிக்கு 11 கோடி செலவிடப்பட்டது – ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.
மதிப்பீடு
விளக்கம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபள்ளியில் அக்டோபர் 25-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக் கொண்டான். குழந்தையை மீட்க மாநில மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழு என கூட்டாக இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலன் அளிக்கவில்லை.
ஆழ்துளை கிணற்றில் 80 மணி நேரங்களை கடந்து சிக்கி இருந்த குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. குழந்தை சுஜித் இறந்தது தமிழக மக்களுக்கு பெரும் மன வேதனையை அளித்து உள்ளது. குழந்தையை மீட்கும் பணியின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் அங்கு இருந்தனர்.
இந்நிலையில், குழந்தை சுஜித்தை மீட்க மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு 11 கோடி ரூபாய் செலவாகி இருப்பதாக செய்திகள் வழியாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.
மீட்பு பணியின் போது பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், வாகனங்கள், ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுக்கான செலவு என அனைத்தையும் சேர்த்தாலும் 11 கோடி எப்படி வரும் என்கிற கேள்விகள் எழுந்தன. மேலும், குழந்தையை உயிருடன் மீட்கவில்லை, ஆனால் அதற்கான செலவு 11 கோடியா என அரசின் மீது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதையடுத்து, குழந்தையை மீட்கும் பணிக்கு உண்டான செலவு குறித்து தமிழக பேரிடர் நிர்வாக ஆணைய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்(16.30 நிமிடத்தில்) தவறான தகவல்கள் என விளக்கம் அளித்து இருக்கிறார்.
News Youtube video archived link
” முதலில் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். மீட்பு பணியின் போது உண்டான செலவுகள் என பரவும் தகவல்கள் வாட்ஸ் அப் உள்ளிட்டவை மூலம் வரும் வதந்தி . நான் எங்கும் பேட்டி கொடுக்கவில்லை. அப்படி நடந்ததாக வதந்திகள் பரவுகிறது ” எனக் கூறியுள்ளார்.
இதேபோல், திருச்சி மாவட்ட ஆட்சியரும் குழந்தையை மீட்கும் பணிக்கு 11 கோடி செலவானதாக கூறும் தகவலை மறுத்து விளக்கம் அளித்து உள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அளித்த பதிலில், ” குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு ரூ5 லட்சம் மற்றும் வாகனங்களுக்கு 5000 லிட்டர் டீசல் மட்டுமே செலவானது. ரூ.11 கோடி செலவானது என்பது பொய்யான தகவல். பொய் தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
குழந்தை சுஜித் வில்சனை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்க மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு 11 கோடி செலவானதாக வெளியாகும் தகவலை தமிழக அரசு அதிகாரிகள் மறுத்து உள்ளனர். மீட்பு பணிகளுக்கு உண்டான செலவு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கியுள்ளார்.
ஆகையால், குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு 11 கோடி செலவானதாக கூறும் தகவல் முற்றிலும் வதந்தியே. மக்கள் இருக்கும் மனநிலையில் தவறான தகவல்களை பரப்பி பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம். இதுபோன்ற தகவல்களின் உண்மைத்தன்மை அறிந்தே பகிர முயற்சியுங்கள்.