This article is from Jun 05, 2019

ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் தமிழில் பேசினால் ரூ.500 அபராதமா ?

பரவிய செய்தி

திமுக ஸ்டாலின் மகள் நடத்தும் சன்ஷைன் பள்ளியில் தமிழில் பேசினால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படுகிறது. ஹிந்தி இரண்டாம் மொழியாக கற்பிக்கப்படுகிறது.

 

மதிப்பீடு

விளக்கம்

மும்மொழிக் கொள்கை, கட்டாய ஹிந்தி என புதிய கல்விக் கொள்கை வரைவு தமிழக மக்களிடையே பலத்த எதிர்ப்பை சந்தித்தது. இந்த எதிர்ப்பின் விளைவில் அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது சமூக வலைத்தளங்களில் மத்திய ஆட்சியின் ஆதரவாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகள் நடத்தும் சன்ஷைன் பள்ளியில் ஹிந்தி மொழி கட்டாயம், தமிழ் மொழியே பயிற்று மொழியாக இல்லை, தமிழில் பேசினால் ரூ.500 அபராதம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. தங்கள் பிள்ளைகள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயமாக வைத்துக் கொள்ளும் இவர்களே ஹிந்தி மொழி கட்டாயமாக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலில் Sunshine Montessori, sunshine senior secondary school மற்றும் Kingston ஆகிய பள்ளிகளை மூடி தமிழ் உணர்வு உங்கள் இரத்தத்தில் உள்ளது என்பதை நிரூபிக்குமாறு பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்து இருந்தார்.

சென்னையின் மடிப்பாக்கத்தில் உள்ள sunshine senior secondary school-யின் இயக்குனராகவும், வேளச்சேரியில் உள்ள Sunshine Montessori பள்ளியின் கரஸ்பான்டன்ட் ஆக ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன் உள்ளார். சன்ஷைன் அகடமாமியை நடந்தி வரும் துர்காவதி கல்வி அறக்கட்டளையில் ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோர் உறுப்பினராக உள்ளனர்.

ஸ்டாலின் குடும்பத்தினருக்கு சொந்தமான பள்ளியில் ஹிந்தி, ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பதாக கூறுவது சரியான தகவலாகும். முதன் முதலில் ஸ்டாலின் குடும்பத்தினரின் பள்ளிகள் குறித்த தகவல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மூலமே தெரிய ஆரம்பித்தது.

2013-ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை கொண்டு வருவதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து இருந்தார். 320 பள்ளிகளில் சோதனை முயற்சிக்கு பிறகு அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை விரிவுபடுத்த உள்ளதாக அரசு அறிவித்தது.

இதற்கு எதிராக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ” ஆங்கில வழிக் கல்வியால் தான் அறிவு மேம்படும் என்பது ஒரு மாயை. மாறாக, தாய்மொழியில் கல்வி கற்பதுதான் சுயசிந்தனை செழுமை அடைய உதவும், பிற மொழியால் கல்வி கற்பது என்பது சுயசிந்தனைக்கு பெரும் தடையாக அமைந்து விடும் ” எனத் தெரிவித்து இருந்தார்.

2014 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில், ” தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் 1 முதல் 6 வகுப்பு வரையில் ஆங்கில வழிக் கல்வி முறையை அமல்படுத்த உள்ளதாக வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் உடைய குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி கற்றனரா ? அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி இருக்கிறதா ?. துர்காவதி கல்வி அறக்கட்டளையில் இயங்கும் செந்தாமரை சபரீசன் இயக்குனராக இருக்கும் சன்ஷைன் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை மட்டுமின்றி ஹிந்தியும் கூட கற்பிக்கப்படுகிறது ” என ஜெயலலிதா தெரிவித்து இருந்தார்.

இப்படி இருக்க அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறை வரக் கூடாது என்பது தவறானது என ஜெயலலிதா தெரிவித்து இருந்தார். முதன் முதலில் ஸ்டாலின் குடும்பத்தினரின் துர்காவதி கல்வி அறக்கட்டளை பற்றி ஜெயலலிதா அவர்கள் எடுத்துக் கூறிய பிறகு பலருக்கும் அதனைப் பற்றி தெரிய வந்துள்ளது. மேலும், அவரின் குற்றச்சாட்டில் ஆதாரங்கள் இருந்தன.

 

2017-ல் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் சன்ஷைன் பள்ளியில் தமிழ் மொழியே இல்லை, தமிழில் பேசினால் ரூ.500 அபராதம் என சமூக வலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கினர். தற்போது மும்மொழிக் கொள்கையால் மீண்டும் பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்டாலின் குடும்பத்தினர் சன்ஷைன் பள்ளியை நடத்தி வருகின்றனர் என்பது உண்மையே. சன்ஷைன் பள்ளிகளின் இணையதளத்தில் ஸ்டாலின் மகள் பள்ளியின் இயக்குனராக உள்ளார் என்ற விவரங்கள் உள்ளன. மேலும், அவை சிபிஎஸ்இ பள்ளிகள் என்பதால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆகையால், அங்கு ஹிந்தி இருப்பதாக கூறுவதும் உண்மை.

ஆயினும், சிபிஎஸ்இ பள்ளிகளில் விருப்ப பாடமாக தமிழ் மொழி இருப்பதால், தமிழ் மொழி பாடமே இல்லை எனக் கூறுவது தவறு. மேலும், தமிழ் மொழியில் பேசினால் ரூ.500 அபராதம் விதிப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. தகுந்த ஆதாரம் இல்லாமல் 2017-ம் ஆண்டில் இருந்தே பிஜேபி தரப்பினர் இக்குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆதாரத்துடன் குற்றச்சாட்டை முன் வைத்தார், ஆனால் தற்போது ஆதாரங்கள் இன்றி குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தி இருப்பது உண்மையே ! தமிழ் பாடமும் இருக்கிறது!

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader