டிக்டாக் வீடியோவை உண்மை என நினைத்து வெளியிட்ட சன் நியூஸ் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் நோவல் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவப் பணியாளர்களின் சேவை பெரிதாய் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், சன் டிவி செய்தியில் மாஸ்க் அணிந்து மலையாள மொழியில் பேசும் பெண் ஒருவரின் 1.20 வீடியோ காட்சி செவிலியரின் நிலை என இடம்பெற்றது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி இவ்வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
செவிலியர் தோற்றத்தில் இருக்கும் பெண் தன் கணவரிடம் பேசுவது மற்றும் குழந்தையிடம் பேசி அழுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது. மலையாள மொழியில் வெளியான வீடியோ சன் டிவி செய்தியின் வாயிலாக அதிகம் வைரலாகி வருகிறது.
வைரலாகும் 1.20 நிமிட செய்தி வீடியோ வெளியானது உண்மையா என்பதை அறிந்து கொள்ள சன் நியூஸ் யூடியூப் சேனலை ஆராய்ந்து பார்த்த பொழுது ஏப்ரல் 7-ம் தேதி வெளியான செய்தியில் 12.40 நிமிடத்தில் இருந்து வைரலாகும் பகுதி இடம்பெற்று இருக்கிறது.
ஆனால், சன் டிவி செய்தியில் வெளியான வீடியோவில் இருப்பவர் செவிலியர் அல்ல, அவர் தன் கணவர், குழந்தையுடன் பேசவும் இல்லை. அது ஒரு டிக் டாக் வீடியோ. கேரளாவைச் சேர்ந்த Ponnu anna manu என்பவரின் டிக்டாக் கணக்கில் வெளியிட்ட வீடியோ வைரலாகி செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் சன் டிவி நியூஸ் தன்னுடைய வீடியோவை வெளியிட்டு உள்ளதாக தன்னுடைய டிக்டாக் கணக்கில் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். தன்னுடைய வீடியோ என்ன செய்தியாக வெளியாகி இருக்கிறது என்பதை அறியாமல் வீடியோ வெளியிட்டு இருப்பார் எனத் தோன்றுகிறது.
@ponnu_anna_manuതമിഴ്നാട്ടിൽSun Tv എന്റെ video വന്നു Corona ഉണ്ടെന്നു പറഞ്ഞു സർക്കാർ എന്നെ പിടിച്ചുകൊണ്ടു പോകുമോ 😷@aachubaburaj ##ponnuannamanu ##kottayamkaris ##suntv♬ original sound – ❤️AACHU DEVA❤️
பின்னர், தன்னுடைய டிக்டாக் வீடியோ தவறாக பரப்பப்பட்டு வருவதாகவும், நான் செவிலியர் இல்லை என அப்பெண் தெரிவித்து வருகிறார். டிக்டாக் கணக்கில் செவிலியர் போன்று பேசி வெளியிட்ட வீடியோ தற்போது தவறாக பரப்பப்பட்டு வருவதை உணர்ந்து இருப்பார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு மருத்துவ சேவை செய்யும் சுகாதார பணியாளர்களின் நிலை குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறன. ஆனால், ஓர் டிக்டாக் வீடியோவை உண்மை என நினைத்து வெளியிட்டு இருப்பதன் மூலம் வைரலாகும் வீடியோக்கள் அனைத்தையும் உண்மையானவை என்ற எண்ணத்திற்குள் செல்லக் கூடாது என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.