தெருநாய்கள் பற்றி உச்ச நீதிமன்றக் கருத்து எனத் தவறான செய்தியை வெளியிட்ட ஊடகங்கள்

பரவிய செய்தி

தெருநாய்கள் யாரையாவது கடித்தால், அதற்கு உணவு தருபவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்களே தான் தடுப்பூசி செலுத்தும் செலவையும், மருத்துவ செலவையும் ஏற்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கேரளாவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய் ஒன்று கடித்து குதறிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகியது. மேலும், தெருநாய்களின் தாக்குதல்களால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கேரளாவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டதாகவும், அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் வி.கே.பிஜூ என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.கே. மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, ” தெருநாய்கள் யாரையாவது கடித்தால் அதற்கு உணவு அளிப்பவர்களே பொறுப்பு என்றும், அதற்கான செலவை அவர்களே ஏற்க வேண்டும் ” என அதிரடியாக தெரிவித்து உள்ளதாக இந்திய அளவில் முன்னணி செய்திகளிலும், தமிழில் முன்னணி ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகி வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

செப்டம்பர் 9ம் தேதியன்று தெருநாய் குறித்து உச்ச நீதிமன்றம் கூறியதாக செய்தி வெளியிட்ட தி இந்து ஆங்கில இணையதளம் அந்த செய்தியை நீக்கி இருக்கிறது. எனினும், அந்த கட்டுரையின் ட்விட்டர் பதிவு நீக்கப்படவில்லை. இதேபோல், ஒவ்வொரு ஆங்கில ஊடகத்தினரும் தங்கள் செய்தியை நீக்கி வருகிறார்கள்.

இதற்கிடையில், வழக்கு நடந்த போது நீதிமன்றத்தில் இருந்ததாகக் கூறும் பாஜக எம்பியும், விலங்குநல ஆர்வலருமான மேனகா காந்தி, பல்வேறு செய்தித் தளங்களில் வரும் செய்திகள் தவறானவை. செய்தியில் வெளியான கருத்தை தெரிவித்தது வழக்கறிஞரே என்றும், “லைவ் லா ” இணையதளத்தின் நிருபர் தவறான கட்டுரையை வெளியிட்டதாக குற்றம் சாட்டி பேசி இருக்கிறார். மேலும், தங்கள் தவறை உணர்ந்த “லைவ் லா ” இணையதளம் கட்டுரையை நீக்கி உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டி பேசி உள்ளார்.

Twitter link 

மேலும், ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல்-இந்தியாவின் வழக்கறிஞர் ஸ்ரேயா பரோப்காரி, ” நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு அத்தகைய பரிந்துரையையோ அல்லது வாய்வழியாகவோ கூட அப்படி தெரிவிக்கவில்லை ” எனக் கூறியதாக பெங்களூர்மிரர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

2022 செப்டம்பர் 9ம் தேதியன்று, உச்சநீதிமன்ற வழக்கில் கேரளாவில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், ” தெருநாய்கள் தாக்கினால் அந்த தெருநாய்களுக்கு உணவளிக்கும் நபர்களை பொறுப்பேற்க வேண்டும் என்றும், நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரி இருந்தார். ஆனால், நீதிமன்ற விசாரணைகள் குறித்து கட்டுரைகளை வெளியிடும் லைவ் லா இணையதளத்தில், அந்த கருத்தை நீதிபதி கூறியதாக தவறாக வெளியாக ஊடகங்களும் தவறான செய்தியை வெளியிட்டு உள்ளன.

முடிவு : 

நம் தேடலில், தெருநாய்கள் யாரையாவது கடித்தால், அதற்கு உணவு தருபவர்களே பொறுப்பு. அவர்களே தான் தடுப்பூசி செலுத்தும் செலவையும், மருத்துவ செலவையும் ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதாக வெளியாகும் செய்தி தவறானவை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தரப்பில் அப்படி எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அக்கருத்து மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞரின் வாதம் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader