This article is from Feb 18, 2022

குஜராத் கொலையுடன் மத வதந்தியை இணைத்து தமிழகத்தில் வாக்கு கேட்கும் பாஜக ஆதரவாளர்கள் !

பரவிய செய்தி

சூரத்தில் ஒரு இந்து பெண் முஸ்லீமாக மாற மறுத்ததால் ஒரு மதவெறியன் முஸ்லீம் ஒரு ஹிந்து பெண்ணைக் கொன்றான், ஹிந்துகளே நமது இந்து பெண்களை இப்படி வெட்டிக் கொண்டே இருப்பார்கள். சகோதரர்களே இப்போதே விழித்துக்கொள் ஹிந்துவே எழுந்திரு.

Twitter link

மதிப்பீடு

விளக்கம்

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் ஒரு இந்து பெண் முஸ்லீமாக மாற மறுத்ததால் முஸ்லீம் இளைஞன் அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்ததாக, பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் இளைஞரின் வீடியோ மற்றும் அந்த பெண்ணை கொலை செய்த பின் எடுத்த வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

சூரத் நகரில் நிகழ்ந்த கொலை சம்பவத்தை வைத்து தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இந்துக்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக ஆதரவாளர்கள் சிலர் பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

உண்மை என்ன ?

சூரத் பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேடுகையில், ” 2022 பிப்ரவரி 13-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா ” Surat: 22-year-old kills school-time friend before suicide bid ” எனும் தலைப்பில் நிகழ்ந்த கொலை சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டு இருக்கிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், ” சூரத் புறநகரில் உள்ள பசோதராவில் 22 வயதான கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் தனது பள்ளி கால தோழியை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். குற்றவாளி ஃபெனில் கோயானி ஆபத்தான நிலையில் ஸ்மிமேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட கிரிஷ்மா வெகாரியாவின் குடும்பத்தினர் வீடியோ எடுத்துள்ளனர். கோயானி உடன் நட்பை வைத்திருக்க வெகாரியா விரும்பவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ” வெளியாகி இருக்கிறது.

சூரத் பகுதியின் எஸ்.பி ஜடேஜா கூறுகையில், ” இறந்த பெண் கடந்த ஒரு வருடமாக கோயானியால் துன்புறுத்தப்பட்டுள்ளார். ஆனால், அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரது குடும்பத்தினர் காவல்துறையை அணுகவில்லை என்றும், இரு குடும்பத்தினரும் இந்த விசயத்தை சுமுகமாக முடிக்க முயன்றதாகவும் ” தெரிவித்ததாக அஹமதாபாத் மிரர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், சூரத்தில் இந்து பெண் முஸ்லீமாக மாற மறுத்ததால் முஸ்லீம் இளைஞன் அந்த பெண்ணை கொன்றதாகப் பரவும் தகவல் தவறானது. அந்த வீடியோ சூரத்தில் கல்லூரி மாணவன் கோயானி தனது பள்ளி கால தோழியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader