நடிகர் சூர்யா ஓபிசி 27% இடஒதுக்கீடு குறித்து வெளியிட்டதாகப் பரவும் போலி அறிக்கை !

பரவிய செய்தி
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியவதும் வாய்ந்த ஒன்றாகும். இதற்கான சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுடைய நலனுக்கான இயக்கங்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு நானும் அகரம் அறக்கட்டளை சார்பாக இணைந்துகொள்கிறேன்.
4000 மருத்துவக் கல்வி இடங்கள் இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கிடைக்கவிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயர்கல்வியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய மொத்தப் பதிவு சுட்டெண்( Cross Enrolment Ratio) தேசிய மற்றும் மாநில சராசரியை விட அதிகமாகும். எனவே இந்தத் தீர்ப்பானது ஒரு வருடத்திற்கு 800-க்கும் மேற்பட்ட கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கும் என்பது எனது நம்பிக்கை. சமூக நீதிப்பாதையில் தொடர்ந்து தமிழ்நாடு வீறு நடை போடட்டும். நாமும் உடன் நிற்போம். அன்புடன் சூர்யா
மதிப்பீடு
விளக்கம்
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், இதனால் கொங்கு மண்டல மாணவர்கள் அதிகம் பயன் பெறுவார்கள் என நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் அறிக்கை ஆனது நடிகர் சூர்யாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களிலோ அல்லது அகரம் அறக்கட்டளையின் சமூக வலைதள பக்கங்களிலோ வெளியாகவில்லை.
வைரல் செய்யப்படும் அறிக்கை குறித்து, 2D எண்டர்டேயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தன் ட்விட்டர் பக்கத்தில், ” 8-01-2022 தேதியிட்டு சூர்யா பெயரில் போலியான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதைத் தவிர்க்கவும். அதுகுறித்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
A fake letter in the name of @Suriya_offl dated 08-01-2022 is being circulated in social media, kindly ignore. Necessary legal action is being taken. #FakeLetter
— Rajsekar Pandian (@rajsekarpandian) January 8, 2022
முடிவு :
நம் தேடலில், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டதாக பரப்பப்படும் அறிக்கை போலியானது என அறிய முடிகிறது.