நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா ? உருவாக்கப்படும் வதந்தி.

பரவிய செய்தி
இதோ ஆதாரம்…நடிகர் சூர்யா இஸ்லாமாக மதம் மாறி விட்டாரா ? இது உண்மை தான ??? சூர்யாவின் பெயர் சம்சுதீனாம்..!
மதிப்பீடு
விளக்கம்
புதிய கல்விக்கொள்கை குறித்து வெளிப்படையாக பேசிய காரணத்திற்காக தமிழ் திரைப்பட நடிகரான சூர்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். தற்பொழுது நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக வீடியோ பதிவு ஒன்றையும் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைதளங்கள், அதனை சார்ந்து இயங்கும் இணையதளங்களில் நடிகர் சூர்யா, இஸ்லாமிய பெண்ணான சதானாஹ்(ஜோதிகா) திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் மதத்திற்கு மாறி, தன் பெயரை சும்சுதீன் என மாற்றிக் கொண்டதாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் மசூதிக்கு செல்லும் சூர்யா மாலை உடன் இருக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
உண்மை என்ன ?
நடிகர் சூர்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக முதன்மை ஊடகங்களில் செய்திகள் வெளியாகவில்லை. மாறாக, நடிகர் சூர்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக வதந்திகள் பரவி வருவதாக இந்தியா டுடே, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட செய்திகளில் 2017 மார்ச் மாதத்திலேயே செய்திகள் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டிலேயே நடிகர் சூர்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக வதந்திகள் பரவி இருந்தன. அது தொடர்பாக நடிகர் சூர்யாவின் உதவியாளர் ராஜசேகர் கூறிய தகவலில்,
” நடிகர் சூர்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறவில்லை. இது சிங்கம்2 படத்தின் ஷூட்டிங் பொழுது எடுக்கப்பட்ட பழைய வீடியோ. அதனை வைத்து சூர்யா முஸ்லீம் ஆக மதம் மாறியதாக வதந்தியை பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில் இருக்கும் மசூதியே குழப்பத்திற்கான காரணம். இந்த வீடியோ கடப்பாவில் சிங்கம் 2 ஷூட்டிங் பொழுது எடுக்கப்பட்டது. கடப்பா அருகே உள்ள மசூதிக்கு வருமாறு சூர்யாவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு விடுத்து இருந்தார். அங்கு அவர் பிராத்தனை செய்த போது வீடியோ பதிவு செய்யப்பட்டது. அது பழைய வீடியோ மற்றும் சூர்யா முஸ்லீம் மதத்திற்கு மாறவில்லை. பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி ” எனக் கூறி இருந்தார்.
முடிவு :
2013-ல் ஆந்திராவில் சிங்கம் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் பொழுது சூர்யா மசூதிக்கு சென்ற வீடியோவே தற்பொழுது மதம் மாறியதாக தவறாக வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பாக 2017-ல் இதே செய்தியை வதந்தி என யூடர்ன் மீம் வடிவில் வெளியிட்டு இருந்தோம். தற்பொழுது விவரமாக கட்டுரையை வெளியிட்டு உள்ளோம்.
அட்டையை வைத்து புத்தகத்தின் மதிப்பை கணக்கிடாதே என்ற வாசகம் சூர்யா தொடர்பாக வைரலாகும் வீடியோ சம்பவத்திற்கு சரியாக பொருந்தும்.