விவேகானந்தரின் நியூயார்க் பயணம் எனத் தவறாகப் பரப்பப்படும் சுவாமி யோகானந்தாவின் வீடியோ !

பரவிய செய்தி
அதிசயம் ஆனால் உண்மை நாம் யாரும் விவேகானந்தரை சரியான கோணத்தில் பார்த்திருக்க மாட்டோம் இப்பொழுது பாருங்கள் விவேகானந்தரை
மதிப்பீடு
விளக்கம்
“விவேகானந்தரை சரியான கோணத்தில் பார்த்திருக்க மாட்டோம் இப்பொழுது பாருங்கள் விவேகானந்தரை” என்றுக் கூறி 11 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது. மேலும் இது சுவாமி விவேகானந்தரின் அரிய காணொளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிசயம் ஆனால் உண்மை நாம் யாரும் விவேகானந்தரை சரியான கோணத்தில் பார்த்திருக்க மாட்டோம் இப்பொழுது பாருங்கள் விவேகானந்தரை pic.twitter.com/zi5vz0g5u8
— அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 (@NaMo_Bharathan) April 14, 2023
இது தவிர யூடியூப்பில் பரவி வரும் வீடியோவில் விவேகாந்தாவின் கடைசி காணொளியை உங்கள் அடுத்த தலைமுறைக்குக் காட்டுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
வைரலான வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘MIRC@SCEDU‘ என்ற வாட்டர்மார்க்கில் உள்ள சொல்லைக் கொண்டு தேடும்போது, ’சவுத் கரோலினா‘ பல்கலைக்கழகத்தின் வலைப்பக்கத்தில் இவ்வீடியோ உள்ளது. மேலும் இது மொத்தமாக 0:48 வினாடிகள் கொண்ட வீடியோவாக உள்ளது.
இவர்களது வலைப்பக்கத்தில் உள்ள வீடியோவுக்கு ‘சுவாமி யோகானந்தா ஆஃப் இந்தியா–அவுட்டேக்ஸ்’ (Swami Yogananda of India-outtakes) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதோடு, இதன் விளக்கப் பகுதியில் 1923-இல் யோகானந்தா சுவாமியும் அவரது குழுவினரும் நியூயார்க்கில் உள்ள பெர்ஷிங் சதுக்கத்தில் நடந்து செல்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பரவிவரும் வீடியோவின் கீபிரேம்களைக் கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் இதன் முழு நீள வீடியோவைத் தேடியதில், 2020 ஜூலை 16 அன்று ‘Ananda Sangha Worldwide‘ என்ற அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் “யோகானந்தா விசிட்ஸ் நியூயார்க்” என்ற தலைப்புடன் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.
‘Autobiography of a Yogi by Paramhansa Yogananda: The Original‘ என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்த வீடியோவானது மார்ச் 6 ஆம் தேதி, “நியூயார்க்கில் சுவாமி யோகானந்தா (1923)” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய அரிய காட்சியா?| உண்மை என்ன ?
இதற்கு முன்பாக, விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய அரிய காட்சி எனத் திரைப்படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டது.
முடிவு:
நம் தேடலில், சுவாமி விவேகானந்தாவின் நியூயார்க் பயணம் எனப் பரப்பப்பட்ட வைரலான வீடியோவில் இருப்பது விவேகானந்தர் அல்ல. இந்த வீடியோ 1923ல் சுவாமி யோகானந்தா நியூயார்க்கிலுள்ள பெர்ஷிங் சதுக்கத்திற்கு சென்றபோது எடுத்த வீடியோ என்பது தெளிவாகிறது.