ஸ்வீடன் நாடு செக்ஸை ஒரு விளையாட்டாக அங்கீகரித்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !

பரவிய செய்தி
முதல் ‘செக்ஸ்’ சாம்பியன்ஷிப்பை வெல்லப்போவது யார்? உலகிலேயே முதல்முறையாக செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்து வரலாறு படைத்துள்ளது ஸ்வீடன்!
மதிப்பீடு
விளக்கம்
உலகின் முதல் முதலாக செக்ஸை ஒரு விளையாட்டாக ஸ்வீடன் நாடு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தொடங்கி சன் நியூஸ், தினத்தந்தி, நியூஸ் 7 தமிழ், zee நியூஸ், ABP நாடு, மாலை மலர் என தமிழ் ஊடகங்கள் வரையிலும் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.
மேலும் அச்செய்திகளில் முதலாவதாக ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 8ல் தொடங்கி, 6 வாரங்கள் நடைபெறவுள்ளதாகவும், பல்வேறு நாடுகளில் இருந்து 20 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவீடனில் உடலுறவு விளையாட்டுக்கு அங்கீகாரம்… விரைவில் சாம்பியன்ஷிப் போட்டி#Sweden https://t.co/et59cdVZWF
— DailyThanthi (@dinathanthi) June 3, 2023
உண்மை என்ன ?
உடலுறவினை ஒரு விளையாட்டாக ஸ்வீடன் அங்கீகரித்தது என வெளியான செய்திகள் குறித்து இணையத்தில் தேடுகையில், ‘A Sex Championship In Sweden? The Reality Of Viral News’ என்ற தலைப்பில் கடந்த 5ம் தேதி NDTV செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்வீடன் நாட்டிலுள்ள செக்ஸ் கூட்டமைப்பின் தலைவராக உள்ள டிராகன் பிராக்டிக் செக்ஸை ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி அந்நாட்டு விளையாட்டு கூட்டமைப்பிற்குக் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்துள்ளார்.
அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக ஸ்வீடிஷ் மொழியில் இயங்கும் Goterborgs-Posten எனும் இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி வெளியான செய்தியை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘Goterborgs-Posten’ தளத்தில் உள்ள செய்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் படித்ததில் அச்செய்தியினை உறுதி செய்ய முடிந்தது.
மேலும் இது தொடர்பாக ஜனவரி மாதமே ‘TV 4’ எனும் ஸ்வீடிஷ் ஊடகத்திற்குத் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் அளித்த நேர்காணலில் ‘செக்ஸ் ஒரு விளையாட்டாக வகைப்படுத்தப்படாது’ எனக் கூறியுள்ளதைக் காண முடிகிறது.
இதுகுறித்து யூடர்ன் தரப்பில் இருந்து ஸ்வீடன் நாட்டின் விளையாட்டு கூட்டமைப்பின் தகவல் தொடர்பு மற்றும் பத்திரிகைப் பிரிவின் தலைவருக்கு அனுப்பப்பட்ட மெயிலுக்கு அளிக்கப்பட்ட பதிலில், ” சில சர்வதேச ஊடகங்களில் ஸ்வீடன் மற்றும் ஸ்வீடன் விளையாட்டுகள் பற்றி தவறான தகவல்கள் பரவி வருகிறது. இவை அனைத்தும் மறுக்கப்படுகிறது.
ஸ்வீடிஷ் விளையாட்டுக் கூட்டமைப்பில் (Swedish Sports Confederation), பாலியல் சம்மேளனம் (Sex federation) உறுப்பினராகியுள்ளதாக சில சர்வதேச ஊடகங்களில் தற்போது செய்திகள் பரவி வருகிறது. இது ஸ்வீடன் விளையாட்டு மற்றும் ஸ்வீடனை கெடுக்கும் நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல். ஸ்வீடிஷ் விளையாட்டுக் கூட்டமைப்பில், பாலியல் சம்மேளனம் (Sex federation) உறுப்பினராக இல்லை. இந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை ” என விளக்கம் அளித்து இருந்தனர்.
மேலும் படிக்க : சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டதாக தவறான செய்தியை வெளியிட்ட முக்கிய ஊடகங்கள் !
இதேபோல், இந்திய மல்யுத்த வீரர்கள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி போராடி வந்தனர். அப்போராட்டத்தைச் சாக்ஷி மாலிக் கைவிட்டதாக ஊடகங்கள் ஒரு தவறான செய்தியை வெளியிட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்தும் யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், ஸ்வீடன் நாடு செக்ஸினை ஒரு விளையாட்டாக அங்கீகரித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.