This article is from Sep 05, 2019

சுவிஸ் வங்கி வெளியிட்ட இந்தியர்களின் பட்டியல் உண்மையா ?

பரவிய செய்தி

சுவிஸ் வங்கியின் அறிக்கை ! இந்திய அரசாங்கத்திற்கு சுவிஸ் வங்கி அனுப்பிய இந்தியர்களின் பட்டியல்.

மதிப்பீடு

விளக்கம்

பல நாடுகளைச் சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் கோடிக் கணக்கில் பணத்தினை செலுத்தி உள்ளனர். அதில் இருக்கும் இந்திய செல்வந்தர்களின் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் மீட்கப்படும் என மத்தியில் ஆளுபவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். சமீபத்தில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்குகள் பற்றிய விவரங்களை அளிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகளில் வெளியாகி இருந்தது.

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் முக்கிய கணக்கு விவரங்களை ” ஸ்விஸ் பேங்க் கார்ப்பரேஷன் ” இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி உள்ள அறிக்கை என ஒரு கடிதம் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

அக்கடிதத்தில், ராஜீவ் ரத்ன காந்தி, ஆண்டிமுத்து ராஜா, ஹர்ஷத் மேத்தா, சரத் பவார், ப.சிதம்பரம், சுரேஷ் கல்மாடி, முத்துவேல் கருணாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பெற்று இருக்கின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் கேட்டுக் கொண்டனர்.

உண்மை என்ன ?

சுவிஸ் வங்கி அனுப்பியதாக கூறும் கடிதத்தில் 2011-ம் ஆண்டு அக்டோபர் 31 எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆக, இந்த கடிதம் 8 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான ஒன்று என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும், கடிதத்தில் ஆரம்பம் முதலே பல பிழைகள் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதனை ஒன்றன்பின் ஒன்றாக காணலாம்.

முதலில் பெறுநர் எனும் இடத்தில் ” Indian Government ” எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர். இந்திய அரசின் அதிகாரப்பூர்வ முகவரி ” Government of india ” , கடிதத்தில் குறிப்பிட்டது போன்று Indian Government அல்ல.

அடுத்ததாக, கடிதத்தில் இந்தியாவின் ரூபாய் மதிப்பின் அடையாளமான ” INR ” பயன்படுத்தி கோடிகளில் குறிப்பிட்டு உள்ளனர். சுவிஸ் வங்கியில் பொதுவாக US டாலர்கள் , யூரோ பவுண்ட் உள்ளிட்ட மதிப்பில் குறிப்பிடுவர், இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கின் தொகை விவரங்களை வெளியிட அவசியமில்லை.

மேலும், இந்தியர்களின் கணக்குகள், கணக்கில் உள்ள தொகை குறித்த விவரங்களை வெளியிடும் பொழுது பிற நாட்டின் விவரங்களை வெளியிட அவசியமில்லை. உதாரணமாக, கீழே ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளின் சதவீதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தில் கீழே வங்கியின் தொலைபேசி எண் ” 0044 151 261 0989 ” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில், முதலில் உள்ள ” 0044 ” என்பது சுவிட்சர்லாந்து நாட்டின் குறியீடு அல்ல, அது UK உடைய தொலைபேசி குறியீடு. சுவிட்சர்லாந்து நாட்டின் சர்வதேச குறியீடு ” 0041 ” .

வங்கி மேலாளரின் கையெழுத்து வலது பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், ஐரோப்பியன் தொலைத்தொடர்பு மற்றும் கடித அமைப்பின்படி இடதுபக்கத்தில் கையெழுத்திடுவார்கள்.

இதைவிட 2014 மே 1-ம் தேதி Yeh log என்ற ட்விட்டர் பக்கத்தில் மேற்கூறிய சுவிஸ் வங்கியின் கடிதம் பகிரப்பட்டு ” சுவிஸ் வங்கியின் ஊழியர்கள் ஏன் ஆங்கிலத்தை கொலை செய்கிறார்கள் ” எனக் கிண்டல் செய்து இருந்தார்.

மேலும் படிக்க : சுவிஸ் வங்கியில் இருப்பது கருப்புப் பணம் இல்லை – அமைச்சர் கணக்கு

இப்படி ஒன்று அல்ல இரண்டு அல்ல பல பிழைகள் சுவிஸ் வங்கியின் கருப்பு பணம் கடிதம் என பரவும் கடிதத்தில் இடம்பெற்று இருக்கிறது. மேலோட்டமாக காணும் மக்களுக்கு சுவிஸ் வங்கி வெளியிட்ட அறிக்கை என்றே நினைக்கத் தூண்டும். அரசியல் சார்ந்து செயல்படுபவர்கள் போட்டோஷாப் முறையில் போலியான கடிதத்தை தயாரித்து உள்ளனர்.

நமக்கு கிடைத்த ஆதாரங்களில் இருந்து சுவிஸ் வங்கி வெளியிட்ட இந்தியர்களின் கணக்கு விவரங்கள் என பரவும் கடிதம் போலியானவை என அறிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader