This article is from Oct 05, 2019

சுவிட்சர்லாந்து அப்துல் கலாம் வருகையை அறிவியல் நாளாக அறிவித்ததா ?

பரவிய செய்தி

தெரியுமா ! 2005 மே 26-ம் தேதி அப்துல்கலாம் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு முதன்முறையாக சென்றாராம். அவர் கால் பதித்த நாளைதான் சுவிட்சர்லாந்து அரசு தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறார்களாம்.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் ஏவுகணை நாயகன் என அனைவராலும் அழைக்கப்படும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் விஞ்ஞானி ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாள் மற்றும் நினைவு நாளிலும் அவரை பெருமைப்படுத்தும் தகவல்கள் மீம்ஸ், வீடியோவாக பகிர்வது வழக்கம்.

அப்படி பகிரப்படும் தகவல்களில் , கலாம் ஐயா சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்ற நாளான மே 26-ம் தேதியை அந்நாட்டின் அறிவியல் நாளாக அறிவிக்கப்பட்டு கொண்டாடி வருவதாக கூறும் தகவல் இடம்பெறாமல் இருப்பதில்லை. இத்தகவல் இந்திய அளவில் பிரபலமடைந்து இருப்பதை கண்டிருப்போம்.

மேற்கூறும் தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தது யூடர்ன் தளம். எனினும், ஆரம்பத்தில் எங்களுக்கு கிடைத்த தரவுகளுக்கு குழப்பங்கள் சூழ்ந்த காரணத்தினால் விரிவான ஆதாரங்களுடன் செய்தியை வெளியிடாமல் இருந்தோம்.

உண்மை என்ன ? 

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை சுவிட்சர்லாந்து நாடு பெருமைப்படுத்தி இருந்தால் காலங்கள் கடந்தாலும் அதனை நினைவுகூறும் வகையிலோ அல்லது அன்றைய தினத்திலோ தமிழக ஊடகங்கள் வெளிப்படுத்தி இருப்பார்கள். ஆனால், தமிழ் ஊடக செய்தியில் அவ்வாறான தகவல்கள் இடம்பெறவில்லை.

இந்திய அளவில் உள்ள முதன்மை ஊடகத்தில் அல்லது செய்தி இணையதளத்தில் ” சுவிட்சர்லாந்தின் அறிவியல் நாள் ” குறித்து செய்திகள் வெளியாகி இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்தோம்.

அதில், 2005-ம் ஆண்டு மே 26-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இடம்பெற்று இருந்தது. அந்த லிங்கில் சென்று பார்க்கையில், ” Swiss declare Science Day in Kalam’s honour ” என்ற தலைப்பில் செய்தி இருக்கிறது. ஆனால், அதில் கோடிங் போன்ற வார்த்தைகளே அதனை சூழ்ந்து இருக்கின்றன.

அதே நாளில் ” Outlook India ” என்ற இணையதளத்தில் அப்துல்கலாம் வருகையை தேசிய அறிவியல் நாளாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்ததாக வெளியிட்டு இருக்கிறது. இதைத் தவிர்த்து, பிற முக்கிய செய்தி இணையதளங்களில் வெளியாகவில்லை.

கலாமின் சுவிட்சர்லாந்து பயணம் : 

2005-ம் ஆண்டில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். 1970-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத்தலைவர் விவி கிரி மேற்கொண்ட பயணத்திற்கு பிறகு இந்திய குடியரசுத்தலைவர் சென்ற முக்கிய பயணமிது.

கலாம் மேற்கொண்ட 4 நாட்கள் பயணத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் அரசியல் தலைவர்கள், மக்களை சந்தித்ததோடு ஜெனிவாவில் இயங்கி வரும் செர்ன்(CERN) ஆய்வு மையத்திற்கு சென்றிருந்தார்.

CERN இணையதளம் : 

” ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு இருந்த செய்தி குறிப்புகளில் ” சுவிட்சர்லாந்து அரசு கலாம் வருகையை அறிவியல் தினமாக அறிவித்ததாக Newindpress.com  என்ற இணையதள பெயரைக் மேற்கோள்காட்டி வெளியிட்டு இருக்கிறது ” .

இதன் மூலம் குழப்பம் அதிகரிக்கவே செய்தது. எனினும், வலுவான ஆதாரங்கள் அரசு இணையதளங்கள், அந்நாட்டு செய்தி தளங்களில் கிடைக்கிறதா என ஆராய்ந்து பார்த்தோம். அத்தகைய தேடலில் , ” swissinfo.ch ” என்ற இணையதளத்தில் 2016-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி ” Kalam, not Modi, was the real rock star ” என்ற தலைப்பில் கலாமின் சுவிட்சர்லாந்து பயணம் குறித்த செய்தியை வெளியிட்டு இருந்தனர்.

அதில் இறுதியாக, சில இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவலுக்கு மாறாக, அவரின் வருகையை கெளரவிக்க மே 26-ம் தேதியை அறிவியல் தினமாக சுவிட்சர்லாந்து அரசு அறிவிக்கவில்லை.

அவரது வருகையின் போது அறிவியல் ஒரு முக்கியமான கருப்பொருளாக இருந்தது, ஆனால் அத்தகைய நாள் எதுவும் அறிவிக்கப்படவில்லை ” என சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் swissinfo.ch இடம் கூறியதாக இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி தளத்தில் செயல்பட்டு வரும் swissinfo.ch என்ற இணையதளம் நேரடியாக சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்ட பொழுது அளித்த பதிலை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

முடிவு : 

நமக்கு கிடைத்த ஆதாரங்களில் இருந்து, சுவிட்சர்லாந்து நாட்டில் மே 26-ம் தேதியை அப்துல் கலாமின் வருகையை கெளரவிக்க அறிவியல் தினமாக அறிவிக்கப்படவில்லை மற்றும் கொண்டாடப்படவில்லை.

இந்திய ஊடகங்கள் ஒரு சிலவற்றிலேயே சுவிட்சர்லாந்து நாட்டின் அறிவியல் தினம் குறித்து செய்திகள் வந்துள்ளன. ஆனால், சமூக ஊடங்களில் மிகப்பெரிய அளவில் நம்பப்பட்டு வந்துள்ளது.

அப்துல் கலாமின் சுவிட்சர்லாந்து பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஆனால், அவரின் வருகையை அறிவியல் தினமாக அறிவிக்கவில்லை என்பதே உண்மை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader