தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் என வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சி மாற்றம் நிகழ உள்ள நிலையில், தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் என தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளே வாழ்த்து தெரிவிக்கும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
2021 மே 7-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று புதிய அரசு அமைய உள்ளது. வெற்றிப் பெற்ற கட்சி ஆட்சிப் பொறுப்பேற்காத நிலையில் எப்படி சைலேந்திரபாபுவை சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து இருக்கும்.
பொதுவாக, ஆட்சி மாற்றம் ஏற்படும் போது காவல் அதிகாரிகள் உள்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகள் மாற்றப்படும் அல்லது இடமாற்றம் செய்யப்படும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்பில்லை.
சைலேந்திர பாபு பணி இடம்மாற்றம் தொடர்பாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை. மேலும், தமிழக அரசின் இணையதளத்தில் செய்தி வெளியீட்டில் பார்க்கையில், கடந்த சில தினங்களாக கொரோனா தொடர்பாகவே அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. சைலேந்திர பாபு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
சைலேந்திர பாபு ஐபிஎஸ் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவரின் சமூக வலைதள பக்கங்களிலும் அப்படி எந்தவொரு பதிவும் வெளியாகவில்லை. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மாற்றப்படலாம் அல்லது அதே பதிவியில் தொடரலாம்.
” தற்போது ரயில்வே டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக வாய்ப்புள்ளதாகவும், அதேபோல் பல ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களும் அடிபடுகிறது. பணி நீட்டிப்பு செய்யப்பட்ட ஜே.ஜே.திரிபாதி இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெறுகிறார். அதுவரை அவரே சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தொடர வாய்ப்பு உள்ளதாகவும், அதன் பிறகே புதிய டிஜிபி நியமனம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது ” என இந்து தமிழ் திசை செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் நியமனம் என பரவும் தகவல் தவறானது, அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என அறிய முடிகிறது.