சிரியா உள்நாட்டு போரில் பொதுமக்கள் 500 பேர் பலி: 30 நாட்களுக்கு போர் நிறுத்தம்.

பரவிய செய்தி
சிரியாவின் உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து அரசு ஆதரவு படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தை, பெரியவர்கள் என நூற்றுக்கணக்கான பேர் பரிதாபமாக இறந்து வருகின்றனர்.
மதிப்பீடு
சுருக்கம்
கடந்த வாரம் கிழக்கு கௌட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களின் மீது நிகழ்த்தபட்ட தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். இதில், 121 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
விளக்கம்
உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அதிர்ச்சிகரமான தாக்குதல்கள் சிரிய மண்ணில் நிகழ்ந்து வருகிறது. பூமியில் ஒரு சொர்க்கம் என அழைக்கப்பட்ட கிழக்கு கௌட்டா இப்போது பூமியில் ஒரு நரகமாக மாறி வருகிறது. சிரியாவில் நடத்தப்படும் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி பலரும் இறப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள பகுதியான கிழக்கு கௌட்டா நகரம் சிரிய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் சிரியாவின் பஷார் அல்-அஸாதின் அரசு படைகளும், அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் இணைந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கௌட்டா பகுதிகளில் ஆவேசமான தாக்குதலில் ஈடுபடத் துவங்கினர்.
4 லட்சம் பேர் வசிக்கும் கௌட்டா பகுதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் அப்பகுதியை மீட்க தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது சிரியா, ரஷ்ய கூட்டுப்படைகள். அதிநவீன விமானத் தாக்குதல், பேரல் ரக குண்டுகள், ராக்கெட் வீச்சு என பல்வேறு விதமாக பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் என அனைத்து பகுதிகளிலும் குண்டுமழையைப் பொழிந்தனர்.
இதற்காக அஞ்சி உணவு, குடிநீர் என ஏதுமின்றி ஒரு வாரமாக கௌட்டா மக்கள் பதுங்கு குழிகளில் வாழ்ந்து வருகின்றனர். ரஷ்யாவின் ஆதரவோடு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல் என்று கூறி சொந்த நாட்டு மக்களையே நீண்ட காலமாக கொன்று குவிக்கும் சம்பவம் சிரியாவில் நிகழ்கிறது. எனினும், கௌட்டாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். இதில், 121 குழந்தைகளும் அடங்குவர். மேலும், டூமா நகரத்தில் சனிக்கிழமையன்று 29 பேர் கொல்லப்பட்டனர் என்று சிரியா மனித உரிமை கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது.
கௌட்டாவில் நிகழ்த்தப்படும் தாக்குதலை, கண் முன்னே நடக்கும் மனிதத் துயரம் என்று வேதனை கலந்து தெரிவித்துள்ளார் ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியே குட்ரெஸ்.
இந்நிலையில், கௌட்டாவில் சிக்கி தவிக்கும் 3,93,000 மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட நிவாரணத்தை அளிப்பதற்காக 30 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தில் குவைத் மற்றும் சுவீடன் நாடுகள் முன் மொழிந்தன.
எனினும், இந்த தீர்மானத்திற்கு ரஷ்ய முட்டுக்கட்டையாக இருந்துள்ளது. இத்தீர்மானம் சாத்தியமற்றது மற்றும் இதில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று ஐ.நாவின் ரஷ்ய தூதர் வாஸிலி நெபென்சியா கூறினார். எனினும், காலம் தாழ்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தீர்மானம் நிறைவேறிய அடுத்த 72 மணி நேரத்தில் 30 நாட்களுக்கு அமல்படுத்தப்படும். இதன் பின்னரே கௌட்டாவில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த தீர்மானம் ஐ.எஸ் குழு, அல்-கொய்தா, நுஸ்ரா பிரான்ட் போன்றவற்றிக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலுக்கு பொருத்தாது என்று கூறியுள்ளது சிரியா அரசு.
சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என்று ரஷ்யா மறுத்தாலும், ரஷ்ய நாட்டின் விமானங்கள் அப்பகுதிகளில் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்று கண்காணிப்பு குழு கூறுகின்றனர். இதே போன்று 2013-ல் நடைபெற்ற ரசாயனத் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக இறந்தனர். அதைவிட கௌட்டாவில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம். 2011 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் சிரியா உள்நாட்டுப் போரில் 3.40 லட்ச பொதுமக்கள் இறந்துள்ளனர். 55லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டை விட்டு ஜோர்டான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
ஒருபுறம் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் , மறுபுறம் அரசு ஆதரவு படையினரின் தாக்குதல், இரண்டிற்கும் இடையே பலியாவது அப்பாவி பொது மக்களே. கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற தாக்குதலில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏதுமறியா குழந்தைகள் இறந்துள்ளனர். பல குழந்தைகள் பெரும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் உலகையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாக்குதலுக்கு அஞ்சி குழந்தைககளை பெற்றோர்கள் தூக்கி கொண்டு ஓடும் இதயத்தை நொறுக்கும் படங்கள் வலைத்தளங்களில் மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. சிரியாவிற்குள் மில்லியன் கணக்கான குழந்தைகள் போரைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது வளர்ந்து வருகின்றனர். மன அழுத்தத்துடன் தினமும் உயிர் போய்விடும் என்று எண்ணி அவர்களது நாட்ககள் நகர்கிறது. சிரியாவில் நடப்பது போர் அல்ல! படுகொலை!