சிரியா மக்களுக்கான நிவாரண பணியில் ஈடுபடும் சீக்கிய தன்னார்வு அமைப்பு.

பரவிய செய்தி
இறுதியாக சிரியாவில் மக்களுக்காக நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளின் படங்கள் வெளியாகியுள்ளன. இதில் பங்காற்றிய கால்சா எய்டு(Khalsa Aid) தொண்டர்கள் அனைவருக்கும் கடவுளின் அன்பு கிடைக்க வேண்டும்.
மதிப்பீடு
சுருக்கம்
கால்சா எய்டு என்னும் சீக்கிய கொள்கையின் மீது பற்றுள்ள தன்னார்வுத் தொண்டு அமைப்பு சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி மனித நேயத்தை உலகறிய செய்துள்ளனர்.
விளக்கம்
கால்சா எய்டு(Khalsa Aid) என்பது லண்டனைச் சார்ந்த தன்னார்வுத் தொண்டு அமைப்பு. இவ்வமைப்பானது உலகில் ஏதேனும் ஒரு பகுதியில் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் வெள்ளம், நிலநடுக்கம், பஞ்சம் மற்றும் போர் போன்றவற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி புரிந்து வருகின்றனர்.
1999 ஆம் ஆண்டில் ஏமன் நாட்டின் கொசோவோ பகுதியில் இருந்த அகதிகளின் அவலநிலைக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ரவீந்தர் சிங் தான் இந்த தொண்டு அமைப்பின் நிறுவனர். மனிதாபிமான எண்ணத்தில் நிவாரண பொருட்களை வழங்க சர்வதேச அளவில், சீக்கிய கொள்கையின் மீது அதிக நம்பிக்கை கொண்ட முதல் தொண்டு நிறுவனம் இதுவே. “ முழு மனித இனமும் ஒன்றே என்பதை அடையாளம் கண்டு உணர் ” என்கின்ற சீக்கிய கொள்கையின் மீது அதீத பற்றுடையவர்கள்.
சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தம் என்று முடிவுக்கு வரும் என்று தெரியாத நிலை உருவாக்கி உள்ளது. இந்த நெருக்கடியில் பல மில்லியன் சிரிய மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர்.
சிரியாவில் நிலவும் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் பல்வேறு தன்னார்வுத் தொண்டு அமைப்புகள் மக்களுக்கு நிவராணப் பொருட்களை வழங்கி தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இதில், கால்சா எய்டு தன்னார்வு அமைப்பின் தொண்டர்களும் பங்குபெற்று மனித தன்மை இன்னும் இவ்வுலகை விட்டு நீங்கவில்லை என்று புரிய வைத்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டில் இருந்தே சிரியாவின் அகதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் கால்சா எய்டு, தற்போது சிரியாவில் பாதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க நிதி திரட்டி வருகின்றனர். சிரியாவில் மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து வரும் கால்சா எய்டு தொண்டர்களின் செயல்பாடுகள் குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
கால்சா எய்டு தன்னார்வு அமைப்பு சிரியாவில் மட்டுமின்றி சில ஆண்டுகளாக லெபனான், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை முயன்ற அளவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.