இராணுவ பீரங்கி சேலம் வந்தது எதற்கு ?

பரவிய செய்தி
சேலம் மாவட்டத்தில் இறக்கப்படும் பழைய ராணுவ பீரங்கி.. பீரங்கியை கொண்டு வரும் அளவிற்கு அவசியம் என்ன இருக்கு.
மதிப்பீடு
விளக்கம்
1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின் போது பயன்படுத்தப்பட்ட ராணுவ பீரங்கி உள்ளிட்ட தடவாளங்கள் சமீபத்தில் டெல்லியில் இருந்து கோவைக்கு வரவழைக்கப்பட்டன. அதில் டி-55 என்ற ராணுவ பீரங்கியை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதி பெறப்பட்டது.
“ டி-55 விஜயந்தா ரக பீரங்கி “ ராணுவ அதிகாரியின் அனுமதியுடன் பிரத்யேகமாக வாகனத்தின் மூலம் சேலம் கொண்டு வரப்பட்டது. சாலையில் பீரங்கி செல்வதை கண்ட மக்கள் ஆச்சரியமாக பார்த்துள்ளனர்.
இளைஞர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்க்கவும், ராணுவத்தின் மீதான மதிப்பை அதிகரிக்கவும், இளைஞர்களை ஊக்குவிக்கவும் சேலம், மதுரை, கோவை மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியை காட்சிக்கு வைக்க தமிழக அரசின் சார்பில் 2015-ம் ஆண்டிலேயே மத்திய அரசு, உள்துறை அமைச்சகம், ராணுவ அமைச்சகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆதலால், 1971-ல் இந்தியா பாகிஸ்தான் போரில் பங்குபெற்று ஓய்வு பெற்ற 40 டன் எடைக் கொண்ட டி-55 விஜயந்தா ரக பீரங்கி சேலம் கொண்டு வரப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைக்கப்பட உள்ளது. பீரங்கியை கண்ட இளைஞர்கள் அதன் அருகில் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிக்கவும், ராணுவம் பற்றி அறிந்து கொள்ளவும் இந்திய ராணுவத்தில் ஓய்வு பெற்ற டி-55 பீரங்கி சேலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.