This article is from Mar 02, 2018

தி.நகரில் காவலர்களுக்கும் இளைஞருக்கும் தகராறு.. நடந்தது இதுதான் !

பரவிய செய்தி

தி.நகரில் தாய், சகோதரியின் கண் முன்னால் இளைஞனை போக்குவரத்து போலீசார் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வந்த இளைஞனுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.

விளக்கம்

போக்குவரத்து போலீசார் ஒரு இளைஞனை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக, தாயின் கண் முன்னால் கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது போன்ற வீடியோ காட்சிக்கு சமூக வலைத்தளத்தில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், அந்த காட்சி வீடியோவின் ஒரு பகுதி மட்டுமே.

கடந்த 02.04.2018 தேதியன்று சென்னையின் தி.நகரில் உள்ள உஸ்மான் சாலையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுரேஷ் மற்றும் ஜெயராம் இருவரும் போக்குவரத்தைக் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். மாலை அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வருவதைக் கண்டு போலீசார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

வாகனத்தை ஒட்டி வந்த இளைஞருடன் அவரது தாய் மற்றும் சகோதரி உடன் வந்துள்ளனர். மேலும், அந்த இளைஞன் ஹெல்மெட் அணியவில்லை. ஹெல்மெட் அணியாமல் மூன்று பேராக வந்தது தவறு என்று கூறிய போலீசாருக்கும் இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மூன்று பேராக செல்வதாக இருந்தால் ஆட்டோவில் போகலாம் அல்லவா என்று போலீசார் சொல்ல, அது எப்படி என்னை ஆட்டோவில் போக சொல்லலாம் என்று இளைஞர் துடுக்காக பேசுவதும் அதை வீடியோ எடுத்தும், ஏளனமாக சிரித்துக் கொண்டே அந்த செயலை செய்கிறார். இதில் வாக்குவாதம் முற்றி இருக்கலாம். முதலில் மூவராக வந்தது, ஹெல்மெட் அணியாதது என பக்கத் தவறுகளை வைத்துக் கொண்டு, அவர் எப்படி போலீசாருடன் சண்டையிடத் துணிந்தார் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

அதன்பின் சிசிடிவி காட்சியை பார்க்கும் போது அந்த இளைஞரை சட்டையைப் பிடித்து இழுத்து வருகிறார்கள் உதவி ஆய்வாளர்கள் இருவர் . அப்போது அந்த இளைஞரின் தாய் தடுக்க பாய்கிறார், மகனை கட்டியணைத்து கொள்கிறார் . பெண் இருப்பதால் மற்றொரு பெண் அதிகாரி வந்து அவரிடம் நிதானமாக பேசுகிறார். பயந்த நிலையில் ஆவேசமாக பேசும் அவரை திடீரென ஒரு ஆண் ஆய்வாளர் பிடித்து தள்ளி தாக்குகிறார். உடனே அந்த இளைஞர் தப்பித்து பாய்கிறார். அதன்பின் தப்பித்து தாயை அடித்த காவலரை நோக்கி பாய்ந்தவரை மின் கம்பத்திற்கு அருகில் இருந்ததால் மின்கம்பத்தொடு சேர்த்து இறுக்கி கொண்டார் மற்றொரு காவலர்.

அடித்த காவல் அதிகாரியின் சட்டையை பிடித்து கொண்டார் இளைஞர். அதை விடுவிக்க காவலர்கள் கையை முறுக்கவும், கையில் அடிக்கவும் செய்த செயல் இருந்த வீடியோ பதிவே வைரலானது. அது கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

அந்த காவல் அதிகாரி இளைஞரின் தாயை தாக்கியது பெரும் தவறு . பெண் காவலரை வைத்து பொறுமையாக செய்ய வேண்டிய வேலையை ஆண் காவலரை கொண்டு பொது வெளியில் இப்படி நடந்திருக்க கூடாது. மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் கவனத்தோடு கையாள வேண்டியது அவசியம்.

இச்சம்பவம் அறிந்து வந்த மாம்பலம் போலீஸ் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர். விசாரணையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன் சாலிக்கிராமத்தை சேர்ந்த கார் ட்ரைவர் பிரகாஷ் என தெரியவந்துள்ளது. மேலும், பிரகாஷின் தாய் தன்னை அதிகாரி ஒருவர் அடித்ததாக வீடியோ பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.

போக்குவரத்து விதியை மீறிய இளைஞனை பிடித்த போது தகராறில் ஈடுபட்டதாகவும், சம்பந்தப்பட்ட இளைஞரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்

மேலும், நடந்ததை முழுமையாக அறியாமல் வீடியோவின் சிறு பகுதியில் கம்பத்தில் வைத்து இளைஞனை பிடித்ததை சமூகவலைத்தளத்தில் வைரலாக்கி உள்ளனர்.

மனித உரிமை ஆணையம் தன்னிச்சையாக வழக்கை எடுத்துக் கொண்டு விசாரணைக்கு திரு.சுரேஷ், திரு.ஜெயராமன் ஆகிய இரண்டு சார்பு ஆய்வாளர்களை அழைத்து உள்ளனர். பொது வெளியில் வன்முறையாய் போன நிகழ்வு தேவையா? இனி நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொடர்ந்து காவலர்கள் கனிவாக நடத்தையையும் கற்க வேண்டும். சமீபத்திய நிகழ்வுகள் வருத்தமளிக்கிறது.

நடந்தது  இதுவே, யார் மீது தவறு என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.!!

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader