தாலிபான்கள் அமெரிக்க ஹெலிகாப்டரில் இறந்தவரின் உடலை தொங்கவிட்டு ரோந்து சென்றனரா ?

பரவிய செய்தி
அமெரிக்கா விட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டரில் அமெரிக்க அதிகாரிகளுக்கு மொழிப்பெயர்ப்பாளர்களாக பணியாற்றிய ஆப்கான் நபரின் உடலை தொடங்கவிட்டவாறு கந்தகார் நகரில் தாலிபான்கள் ரோந்து சென்றது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுவதுமாக வெளியேறிய பிறகு அமெரிக்கா விட்டு சென்ற ராணுவ ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் தாலிபான்கள் வசமாகியது உலக அளவில் பெரும் பேசு பொருளாகியது.
இந்நிலையில், அமெரிக்கா விட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டரில் அமெரிக்க அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பு பணி செய்து வந்த நபரின் உடலை தொங்கவிட்டபடி தாலிபான்கள் கந்தகார் பகுதியில் ரோந்து சென்றதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி இந்திய செய்திகளிலும் வெளியாகி வருகிறது.
உண்மை என்ன ?
தாலிபான்கள் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை கந்தகார் நகரில் இயக்கியது குறித்து ட்விட்டரில் ஆகஸ்ட் 30-ம் தேதி ஜாஹித் ஜலால் என்ற ட்விட்டர்வாசி சில வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.
இவ்வீடியோ இந்தியாவில் வைரலான பிறகு ஜாஹித் ஜலால் என்ற ட்விட்டர் பக்கத்தில் முந்தைய பதிவை பகிர்ந்து, ” ஒரு நாள் முன்பாக கந்தகாரில் தாலிபான் விமானத்தை இயக்கிய வீடியோவை நானே பதிவு செய்தேன். இது கொடியை ஏற்றுவதற்காக செய்யப்பட்டது. தாலிப் தனது மொபைல் போனை எடுத்து படம் எடுப்பதை வீடியோவில் காணலாம். ஆனால், தாலிபான்கள் மொழி பெயர்ப்பாளரை கொண்டு வந்ததாக இந்திய மற்றும் பிற ஊடகங்கள் பொய் சொல்கின்றன ” என பதிவிட்டு இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிலால் சரிவாரி என்பவரின் ட்விட்டர் பக்கத்தில், ” வீடியோவில் காணப்பட்டவர் தாலிபான் கொடியை காற்றில் பறந்தபடியே நிறுவ முன்றதாகவும், ஆனால் அது இறுதியில் வேலை செய்யவில்லை ” என்றும் பதிவிட்டு இருக்கிறார்.
ஆகஸ்ட் 30-ம் தேதி கந்தகாரைச் சேர்ந்த கான் முகமது அயான் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் தொங்கியப்படி வந்த நபர் உயரமான கொடி கம்பத்தில் தங்கள் கொடியை ஏற்ற முயற்சிக்கும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். வீடியோ உடன், கந்தகாரின் கவர்னர் மாளிகையில் தாலிபான்கள் தங்கள் கொடியை ஏற்ற முயற்சித்து தோல்வியடைந்ததாக முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் ஆப்கான் மொழிப்பெயர்ப்பாளரின் உடலை தொங்கவிட்டபடி தாலிபான்கள் கந்தகார் நகரில் தாலிபான்கள் ரோந்து சென்றதாக வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது.
ராணுவ ஹெலிகாப்டரில் தொங்கியப்படி இருக்கும் நபர் இறக்கவில்லை, உயிருடன் இருக்கிறார். கந்தகாரில் உள்ள கவர்னர் மளிகையில் உள்ள கம்பத்தில் தங்கள் கொடியை ஏற்ற தாலிபான்கள் ஹெலிகாப்டரில் தொங்கியபடி முயற்சித்ததாக கந்தகாரைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்நாட்டு பத்திரிகையாளரின் பதிவுகளின் வாயிலாக அறிய முடிகிறது.