தமிழ்த் தாய் வாழ்த்தில் தமிழர் நல் திருநாடும் என்பது திராவிட நல் திருநாடும் என மாற்றப்பட்டதா ?

பரவிய செய்தி
“தமிழர் நல் திருநாடும்” என்பதை அழித்து, “திராவிட நல் திருநாடும்” என்று உள் சொருகி, மனோன்மணியம் சுந்தரனாரை இழிவு படுத்தி உள்ளனர்..!!!
மதிப்பீடு
விளக்கம்
பெ.சுந்தரனார் இயற்றிய புகழ்பெற்ற மனோன்மணீயம் நூலில் இடம்பெற்ற “நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்” பாடல் தமிழ்த் தாய் வாழ்த்தாக அரசால் அங்கீகரிக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் இருந்த சில வரிகள் நீக்கப்பட்டு தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ” தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் ” என இருந்த வரி ” தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் ” என திரிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதேபோல், சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில் என்பது குமாரி கண்டமிதில் என இருந்ததாகவும் குறிப்பிட்டு வீடியோ பதிவு ஒன்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
உண்மை என்ன ?
2017-ம் ஆண்டில் தமிழ்த்தாய் வாழ்த்து திருத்தி அமைக்கப்பட்ட பாடல் என வைரலான தகவல் தொடர்பாக வெளியிட்ட கட்டுரையில், ”
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ” எனும் வரிகளே தமிழக அரசால் நீக்கப்பட்டு, தமிழ் மொழியின் பெருமையை மட்டும் கூறும் விதத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றினர் எனக் கூறி இருந்தோம்.
மேலும் படிக்க : தமிழ்த்தாய் வாழ்த்து திருத்தி அமைக்கப்பட்ட பாடலா ?
இதற்கு ஆதாரமாக, மனோன்மணீயம் நூலின் ” தமிழ்த்தெய்வ வணக்கம்” பாடலின் பிடிஎஃப் பக்கத்தை இணைத்து இருந்தோம். அந்த பிடிஎஃப் பக்கத்தில் “பரத கண்டமிதில்” மற்றும் “திராவிட நல் திருநாடும்” என்றே இடம்பெற்று இருக்கிறது.
மேற்காணும் பதிவுகளின் கமெண்ட்களில் சிலர் இந்த பாடலின் பக்கத்தையும் திரித்து மாற்றப்பட்ட பாடல் என விவாதம் செய்து இருக்கிறார்கள். ஆனால், இதை திரித்து அமைக்கப்பட்ட பாடல் என கூறியவர்களும், உண்மையான பாடல் இதுவே என வரிகள் மாற்றத்துடன் பகிர்ந்து வருபவர்களும் அதற்கான ஆதாரத்தை வழங்கவில்லை, டைப் செய்த வரிகளை காண்பித்து இதுவே உண்மையான பாடல் என சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
இது குறித்து எத்திராஜ் மகளீர் கல்லூரியின் உதவி தமிழ் பேராசிரியரும், பாடலாசிரியருமான உமாதேவி அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், ” சுந்தரனாரின் அசல் பாடலில் இருந்து சில வரிகள் தவிர்க்கப்பட்டு திமுக அரசு அப்படாலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்து. அந்த நீக்கிய வரிகளை நோக்கினால் இந்த குழப்பம் களையும்…”
நீக்கிய வரிகளோடு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் : ”
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!”
“இதில் கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு மொழி இவையெல்லாம் தமிழ்மொழியில் இருந்து வந்த கிளை மொழிகள். எனவே இது எல்லாம் நம்முடைய உதிரத்தில் இருந்து உதிர்த்த மொழி தான், ஆரியதை போல வழக்கொழிஞ்சு போய்விடாமல் திளைத்து நிற்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இதை நீக்கிவிட்டதால் தான் தற்போது இந்த குழப்பம் நிகழ்ந்துள்ளது. மற்றபடி திராவிடர் என்ற சொல்லை தான் அவர் பயன்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
வரிகள் நீக்கம் குறித்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் டாக்டர் சித்ரா கூறுகையில் , “வாழ்த்துப் பாடலில் தூற்றுவது போன்ற வரிகள் இடம்பெற வேண்டாம் எனக் கருதி அவ்வரிகள் நீக்கப்பட்டுள்ளது ” என்றார்.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் ” பல்லுயிரும் பலவுலகும் ” எனும் வரிகளே நீக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பலரும் அறிந்து இருக்கிறார்கள். அதுகுறித்த செய்திகளும் இங்குள்ளன.
பரத கண்டமிதில் மற்றும் திராவிட நல் திருநாடும் எனும் வரிகள் பாடலில் மாற்றி அமைத்து இருந்தால் அது சர்ச்சையாக உருவெடுத்து இருக்கும், பல எதிர்ப்புகளை சந்தித்து இருக்கும். ஆனால், அப்படி எந்த எதிர்ப்பும் எழுந்ததாக தெரியவில்லை.
முடிவு :
நம் தேடலில், தமிழ்த் தாய் வாழ்த்தில் “தமிழர் நல் திருநாடும்” என்பதை அழித்து, “திராவிட நல் திருநாடும்” வரிகள் மாற்றப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என உறுதி செய்ய முடிகிறது.