தமிழ் மட்டும் பேசும் குழந்தை நாக்பூர் போலிஸிடம் உள்ளதா ?| வைரல் வீடியோ !

பரவிய செய்தி
தமிழ் மட்டும் பேசும் குழந்தை நாகப்பூர் போலிஸிடம் உள்ளது. பகிருங்கள்
மதிப்பீடு
விளக்கம்
தமிழ் மட்டுமே பேசும் குழந்தை நாக்பூர் பகுதியில் உள்ள காவலர்கள் பாதுகாப்பில் இருப்பதால் குழந்தையை இழந்தவர்களுக்கு தெரிவிக்குமாறு காவல் அதிகாரி ஒருவர் இந்தியில் பேசும் வீடியோ ஒன்று முகநூல் , யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது.
குழந்தையை இழந்தவர்களுக்கு சென்று சேரும் நோக்கத்தில் பகிருமாறும் கூறும் வீடியோ பதிவு கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து தற்பொழுது வரை தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
முதலில் , இதே வீடியோவை யூட்யூப் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டிய எண் ” 03002356906 “-ஐ அளித்து இருந்தனர். இதே எண்ணை வீடியோவில் காவல் அதிகாரி கூறி இருப்பார். இதை வைத்து தேடிய பொழுது பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியை குறிப்பிட்ட யூட்யூப் வீடியோக்கள் கிடைத்தன.
மேலும், வீடியோவில் பேசும் காவல் அதிகாரி 40-வது நொடியில் ” khawaja ajmer nagri ” காவல் நிலையத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு கூறி இருப்பார். அந்த காவல் நிலையம் எங்கு இருக்கிறது என்பது குறித்து தேடிய பொழுது பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியையே காண்பிக்கிறது.
அடுத்ததாக, பாகிஸ்தான் நாட்டின் காவலர்கள் உடையுடன் பொருத்தி பார்த்த பிறகே வீடியோவில் இருப்பது பாகிஸ்தான் நாட்டின் காவல் அதிகாரியே என உறுதி செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு காவலர் பேசும் வீடியோ பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் உள்ள khawaja ajmer nagri காவல் நிலையத்தை சேர்ந்தது என அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், குழந்தை பேசவில்லை மற்றும் தன் பெயரை கூறவில்லை என வீடியோவில் காவல் அதிகாரி கூறி இருக்கிறார். இதை அறியாமல், தமிழ் பேசும் குழந்தை என இணைத்து தவறாக பகிர்ந்து வந்துள்ளனர்.
முடிவு :
நம்முடைய தேடலில், தமிழ் மட்டுமே பேசும் குழந்தை நாக்பூரில் காவலர்களிடம் இருப்பதாக கடந்த ஆண்டில் இருந்து பகிரப்பட்டு வைரலாகி இருக்கும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, ஆனால், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதை உறுதி செய்ய முடிந்தது.