This article is from Feb 02, 2018

இனி தமிழிலும் இமெயில் முகவரியை பயன்படுத்தலாம்.

பரவிய செய்தி

இனி மின்னஞ்சல் முகவரிகள் தமிழ் மொழியிலும் இருக்கும். முதல் முறையாக தமிழில் இமெயில் முகவரியை உருவாக்கி பயன்படுத்தப்போவது நமது தலைமுறையினர் தான்.

மதிப்பீடு

சுருக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தமிழ் உள்பட 15 இந்திய மொழிகளில் மின்னஞ்சல்(இமெயில்) முகவரியைப் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை பிப்ரவரி 21-ம் தேதி வெளியிட்டது.

விளக்கம்

 

தொழில்நுட்பம் முன்னேறிய இன்றைய காலக்கட்டத்தில் அதிகளவில் தகவல்களை தேடுதல், செய்திகளை அனுப்புதல் போன்றவற்றில் இந்திய மொழிகளை பயன்படுத்தும் நிலை இருந்தாலும், தகவல்களை பரிமாறிக் கொள்ளும் மின்னஞ்சல்களின் முகவரிகள் மட்டும் ஆங்கிலத்திலேயே இருந்து வருகிறது.

ஆங்கிலத்தை தவிர்த்து இந்திய மொழிகளில் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பம் பலரது மனதில் நீண்டகாலமாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகத் தாய்மொழி தினமான பிப்ரவரி 21-ம் தேதியன்று இனி மின்னஞ்சல் முகவரியை தமிழ் உள்பட 15 இந்திய மொழிகளில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய மொழிகளான ஹிந்தி, போடோ, தோக்கிரி, கொங்கணி, மைதிலி, மராத்தி, நேப்பாளி, சிந்தி, பெங்காலி, குஜராத்தி, மணிப்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். தற்போது கிரேக்கம், ரஷ்யம், சீனம் ஆகிய மொழிகளில் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி உள்ளனர்.

தமிழ் உள்பட மற்ற இந்திய மொழிகளில் உருவாகும் மின்னஞ்சல் முகவரியானது மைக்ரோசாப்டின் ஆபீஸ் 365, அவுட்லுக்  2016, அவுட்லுக், எக்சுச்சேன்ஞ் ஆன்லைன், எக்சுச்சேன்ஞ் ஆனலைன் ப்ரோடேக்சன்(EOP) போன்ற செயலிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். முதல் முறையாக கணினிகளில் உள்ள அவுட்லுக் கணக்குகளில் இந்திய மொழிகளில் உருவாக்கிய மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தலாம். இதற்கென அன்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ்-ல் இயங்கக்கூடிய அவுட்லுக் செயலிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பயனாளர்கள் மின்னஞ்சலை உள்ளூர் மொழிகளில் அனுப்பவும், பெறவும் முடியும். 

15 விதமான  இந்திய மொழிகளின் பயன்பாட்டிற்கென சர்வதேச குறியீடுகள் மற்றும் எழுத்து வடிவங்களை ஏற்கும் வகையில் UNICODE அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மற்ற இந்திய மொழிகளில் மின்னஞ்சல் முகவரியை அமைப்பதற்கு முதலில் தளப்பெயரை (International Domain name) அந்தந்த மொழிகளில் பதிவு செய்ய வேண்டும், இதற்கான சேவைகளை சில இந்திய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எதிர்காலத்தில் IDN மற்றும் மின்னஞ்சல் பெயர்கள் பயன்பாட்டில் வரும் பட்சத்தில் மைக்ரோசாப்ட் தயாரிப்புகள் அனைத்திலும் இந்திய மொழிகள் இணைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

1998-ம் ஆண்டில் பாஷா என்ற திட்டத்தில் இணையத் தொடங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய மொழிகளில் கணினி சாதனங்களை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை ஏற்கிறது. மேலும், 11 இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் ஆபீஸ் மற்றும் விண்டோஸில் உள்ளன.

இந்தியாவில் இன்டர்நெட் மற்றும் இமெயில் தொழில்நுட்பத்தை அதிகளவில் ஆங்கிலம் தெரிந்தவர்களே உபயோகித்து வருகின்றனர். எனினும், ஆங்கிலத்தை விட அதிகளவில் இருக்கும் பிற மொழி பேசுபவர்களையும் இணைய உலகில் கொண்டும் வர இவ்வாறு முயற்சித்துள்ளனர். அந்த மொழிகளில் செயல்படுத்துவதன் மூலம் இன்டர்நெட் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று தீர்மானித்துள்ளனர்.

தமிழ் மொழியில் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தலாம் என்ற மைக்ரோசாப்ட் அறிவிப்பால், இனி தமிழில் தளப்பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் பெயர்கள் அதிகரிக்கும் என்பதை உறுதியாக கூறலாம். Xgenplus போன்ற இணையத்தளத்தில் Domain பெயரை தமிழில் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். தற்சமயம் .இந்தியா என்ற domain ₹400 ஆக இருக்கிறது. உதாரணமாக தளத்தின் பெயர் www.youturn.in என்பதை தமிழில் பெறலாம். அதன் URL www.யூடர்ன்.இந்தியா என்று இருக்கும். ஆங்கிலத்தில் example@youturn.in என்ற இமெயில் முகவரியை உதாரணம்@யூடர்ன். இந்தியா என்று தமிழில் உருவாக்கிக் கொள்ளலாம். இதனைஅவுட்லுக் போன்ற மைக்ரோசாப்ட் செயலிகளில் சாதரணமாக ஆங்கிலத்தில் இமெயில் முகவரியை உபயோகிப்பது போன்று உபயோகிக்கலாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader