2014-க்கு பிறகு தமிழக மீனவர்கள் தாக்கப்படவில்லையா ?

பரவிய செய்தி

தமிழக மீனவர்கள் நிலை இன்று 2019 : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் பயமின்றி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

மதிப்பீடு

சுருக்கம்

2017-ல் இலங்கை கப்பல் படையினரால் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது மட்டுமின்றி இந்திய கப்பல் படையினரே ஹிந்தி தெரியாத காரணத்தினால் மீனவர்களை தாக்கிய சம்பவங்கள் எல்லாம் கடந்த 5 ஆண்டுகளில்  நிகழ்ந்து உள்ளது என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர் என்பதை அறியாமல் தவறான செய்திகளை வெளியிட்டு உள்ளனர்.

விளக்கம்

நீண்ட காலமாக தமிழக பகுதியில் இருந்து கச்சத்தீவு கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள்…! மன்னிக்கவும், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் செய்திகள் அதிகம் கேள்விப்பட்டு கொண்டே இருக்கிறோம். எங்கும் யாரும் இந்திய மீனவன் சுடப்பட்டான், தாக்கப்பட்டார்கள் என கூறுவதில்லை. தமிழக மீனவர்கள் என்றே குறிப்பிடுகின்றனர்.

Advertisement

சரி, பரவிய செய்திக்கு செல்வோம்.. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் அனுபவித்த வேதனையை அனைவரும் அறிவர். ஆனால், இன்று பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய-தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதில்லை என தற்போதைய ஆட்சியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய-தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதில்லை என்பது முற்றிலும் தவறான தகவலாகும். ஒவ்வொரு ஆண்டிலும் தாக்கப்பட்ட மீனவர்கள் விவரங்கள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

2017 :

” மார்ச் 2017-ல் இலங்கை கடற்படையால் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயதான மீனவர் ப்ரிட்கோ சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மீனவர்கள் பலரும் படுகாயமடைந்து திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது ” 

Advertisement

முன்பு எல்லாம் இலங்கை கடற்படை மட்டுமே மீனவர்களை தாக்குவதாக செய்திகளை கேட்டு இருப்போம். ஆனால், இந்திய கடற்படை மீனவர்களை தாக்கிய சம்பவம் 2017-ல் அரங்கேறியது.

2017-ம் ஆண்டு நவம்பரில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இந்திய கடற்கரை பாதுகாப்பு வீரர்கள்(ICG) மீனவர்களின் படகுகள் மீது ரப்பர், அலுமினியம் புல்லட்கள் கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியதாக மீனவர்கள் புகார் அளித்தனர்.

அதில் பாதிக்கப்பட்ட பிச்சை ஆரோக்கியதாஸ் மற்றும் ஜான்சன் ஆகியோர் காயமடைந்து உள்ளனர். மேலும், மீன்பிடி படகுகளை நிறுத்தி மீனவர்களிடம் ஹிந்தி தெரியவில்லை என்ற காரணத்திற்காக தாக்கியதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக இந்திய கடற்கரை பாதுகாப்பு வீரர்கள் மீது Arms act 1959 கீழ் Section 323, 307(கொலை முயற்சி) மற்றும் Section 27(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முன்பாக,  2017 அக்டோபர் மாதத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க 200-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்றவர்களை கச்சத்தீவு பகுதிகளில் நிறுத்தி  வலைகளை வெட்டி, மீனவர்களை விரட்டி அடித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அக்டோபர் 2-ம் தேதி செய்தி வெளியாகி உள்ளது.

2018 : 

டிசம்பர் 2018-ல் 500 படகுகளில் கச்சத்தீவு நோக்கி மீனவர்கள் சென்றுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட இயந்திர படகுகளில் வந்த இலங்கை படையினர் 3000 மீனவர்களை விரட்டியதாக மீனவ அமைப்பின் பொதுச்செயலாளர் போஸ் கூறி ஹிந்து செய்தியில் வெளியாகி இருக்கிறது.

2019 : 

ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து கச்சத்தீவு நோக்கி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக பிப்ரவரி 22-ம் தேதி ஹிந்து செய்தியில் வெளியாகி உள்ளது.

” ஜனவரி 13-ம் தேதி இலங்கை கடற்படையால் விரட்டப்பட்டதில் இரு படகுகள் கவிழ்ந்து முனியசாமி என்பவர் உயிரிழந்தார். இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் பழனிச்சாமி முனியசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார் “. 

கச்சத்தீவு பகுதிகளில் இந்திய-தமிழக மீனவர்கள் விரட்டப்படுவது, வலைகளை வெட்டி நாசம் செய்வது, படகுகளை சேதப்படுத்துவது, மீனவர்களை தாக்குவது கைது செய்வது போன்ற சம்பவங்கள் இன்றும் தொடர்கின்றன. மீனவர்களுக்கு நடக்கும் இக்கொடுமைகள் முடிந்தப்பாடில்லை.

உதாரணமாக கூறிய செய்தித் தகவல் போல் பல சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளிலும் அரங்கேறியுள்ளது. யார் ஆட்சியில் அமர்ந்தாலும் இக்கொடுமை தொடரத்தான் போகிறது.

 

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button