இந்திய அகழ்வாராய்ச்சியில் 20,000 கல்வெட்டுகளை கொண்ட தமிழ் மொழி !

பரவிய செய்தி
இருபதாயிரம் தமிழ் கல்வெட்டுகள். இந்திய அகழ்வாராய்ச்சிக்கே தமிழ்தான் முகவரி.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய நிலப்பரப்பு பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட பழமையான பிரதேசமாகும். அத்தகைய சேதத்தில் ஓவ்வொரு பகுதியிலும் மன்னர்கள் தங்களின் ஆட்சி காலத்தில் பல கல்வெட்டு சுவடுகளை விட்டுச் சென்றுள்ளனர். இந்தியாவிலேயே கல்வெட்டுகள் குவிந்து கிடக்கும் பகுதியாக தென்னிந்திய மாநிலங்கள் திகழ்கின்றன.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கணக்கிடப்பட்ட கல்வெட்டுகளின் எண்ணிக்கையே மிக அதிகம். இதில், தொன்மையான மொழிகளில் ஒன்றாக கருதப்படும் தமிழ் மொழியின் கல்வெட்டுகளே அதிக எண்ணிக்கையில் இருப்பதை பலரும் அறிந்து இருப்பர். அதனைக் குறித்து ஒரு பதிவு சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.
இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளை மொழி மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து ஒவ்வொரு மொழிக்குமாக அட்டவணைப்படுத்தி உள்ளனர். அதில், தமிழ் மொழி தோராயமாக 20,000 கல்வெட்டுகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக, கன்னட மொழியில் 10,600 கல்வெட்டுகள், சமஸ்கிருதத்தில் 7,500 கல்வெட்டுகள், தெலுங்கு மொழியில் 4,500 கல்வெட்டுகள், ப்ரக்ரிட் மொழியில் 2,200 , சிதைந்த சமஸ்கிருதத்தில் 500 கல்வெட்டுகள், மராத்தியில் 150 கல்வெட்டுகள், பிற மொழிகளில் 200 கல்வெட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://www.tnarch.gov.in/epi.htm) இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. அகழ்வாராய்ச்சி துறையின் தளத்தில் அளிக்கப்பட்ட தகவல்கள், Indian Epigraphy (1996) ஆய்வின் படி தமிழகத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் எண்ணிக்கையை குறிப்பிடுகின்றன.
மேலும், அதற்கு ஆதாரமாக Journal of the Epigraphical Society of India Volume 19 : 1993 என்ற ஆய்வுக் கட்டுரையை அளித்து இருந்தனர். அதில், தமிழில் 28,000 கல்வெட்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 59,800 கல்வெட்டுகள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள் மற்றும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதை கிமு300 முதல் கிபி 1900 வரையில் எண்ணிக்கையில் பிரித்து உள்ளனர். அதில், கிபி 851 முதல் 1300 வரையில் மட்டும் அதிகபட்சமாக 16 ஆயிரம் கல்வெட்டுகள் உள்ளன.
இந்திய அளவில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களில் தமிழ் அதிக எண்ணிக்கை உடன் முதலிடத்தில் இருக்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் தங்களின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுக் குறிப்புகளை கல்வெட்டுகளின் வாயிலாக தெரிவித்து விட்டு சென்றுள்ளனர். இன்னும் பல பகுதிகளில் இருக்கும் கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்படாமல் சிதலமடைக்கின்றன. அவற்றையும் பாதுகாத்தால் அவசியம். வரலாற்று ஆதாரங்களின் மூலம் இந்திய கல்வெட்டுகளின் பொக்கிஷமாக தமிழ் மொழி திகழ்கிறது.