This article is from Jan 25, 2018

தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் தமிழக குழந்தைகள்.

பரவிய செய்தி

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 8% பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விளக்கம்

உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோலின்படி ஒரு குழந்தை அதன் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் இருந்தாலோ, பார்ப்பதற்கு உடல் மெலிந்து மற்றும் உள்ளங்கால்கள் வீக்கமாக இருந்தாலோ அக்குழந்தை தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளது என்று அர்த்தம்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பானது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு,  பெண்களுக்கு ஏற்படும் இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு நடைபெற்று வருகிறது.

2017-ம் ஆண்டிற்கான தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 8% பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் நிலவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது.

8% குழந்தைகளில் பெரும்பாலோர் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த தெளிவான அறிக்கை இல்லை, மாநிலத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டமும் சரியாக கணக்கெடுப்பதில்லை, அதற்கான வசதியும் அவர்களிடம் இல்லை என்று தமிழகம் மற்றும் கேரளா யுனிசெப் அமைப்பின் தலைவர் ஜோப் சக்காரியா தெரிவித்துள்ளார்.

“ குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது. தமிழகத்தில் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வயதில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரமின்மையும் பெண்களுக்கு இரத்தசோகை ஏற்பட வழிவகைச் செய்கின்றன “. 

ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள் ஊட்டச்சத்தை உறுதி செய்யப்பட வேண்டிய அவசியமான காலகட்டமாகும். குழந்தைகளுக்கு இயற்கையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை அவர்களின் வளர்ச்சியின் ஆரம்பத்திலேயே அளிப்பது நல்லது. மேலும், கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவுகளை உண்பது மட்டுமின்றி சுகாதாரமான சூழ்நிலையிலும் இருத்தல் அவசியம்.

அதேபோன்று அனைவரும் தங்களது உணவில் அரிசி, கோதுமை மட்டுமல்லாமல் பலதரப்பட்ட தானியங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

Sample Registraion system statistical-ன் 2015 அறிக்கையின்படி, தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 1000 குழந்தைகளில் 19 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைப்பாட்டால் இறக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியது. மேலும், தமிழகத்தில்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 23 சதவீதம் குழந்தைகள் எடைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader