ஏழைகளுக்கு டயாலிசிஸ் உதவி செய்யும் டா.தமிழிசை & சௌந்தரராஜன்!

பரவிய செய்தி
அக்கா டாக்டர் தமிழிசை அவர்களை கிண்டலடித்த அதிமேதாவிகளே இதோ தேர்தல் வெற்றி தோல்வி என்பது பின்பு முதலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் தன் மகனுக்கு மருத்துவ உதவி கேட்ட மகராசனுக்கு, தன் கணவர் டயாலிசிஸ் மருத்துவர் கண்டிப்பாக உதவி செய்கிறேன் என வாக்குறுதி அளித்து இருந்தார் தமிழிசை!
அதன்படி அவரது பரிந்துரையின்படி குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகராசனின் மகன் அனுமதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார் அக்கா டாக்டர் தமிழிசை.
மதிப்பீடு
விளக்கம்
மகராசன் என்பவரின் மகனிற்கு டயாலிசிஸ் உதவிகள் அளிப்பதாக தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாகவும், அதனை நிறைவேற்றியதாகவும் ஃபேஸ்புக்கில் மீம் பதிவுகள் பகிரப்படுகிறது.
2019 மே 3-ம் தேதி குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த மகராசன் என்பவரின் மகனை சந்தித்து நலம் விசாரித்ததாக டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
தூத்துக்குடியில்..பிரச்சாரத்தின் போது..சந்தித்த…மகராசன்.சிறுநீரக..சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு..செய்ததினால்.இன்று குலசேகர த்தில்..மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில்.கட்டணமில்லாமல்..சிகிச்சை பெற்று வருகிறார்..அவரை இன்று நேரில் சென்று நலம் விசாரித்தேன்..நலம் பெற வேண்டும் pic.twitter.com/cTJadxP7gf
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 3, 2019
அதில், தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தின் போது மகராசன் என்பவர் தன் மகனின் சிறுநீரக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததால் இன்று கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழிசை மற்றும் அவரின் கணவர் சௌந்தரராஜன் இருவரும் ஏழைகளுக்கு வீட்டிலேயே டயாலிசிஸ் உதவி செய்ததாக விகடனுக்கு அளித்த பேட்டியில் டாக்டர்.சௌந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.
தங்களின் வீட்டிலேயே இரண்டு மெஷின்களை வைத்து ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.200க்கு என டயாலிசிஸ் செய்வதாகவும், ஒருமுறை தங்கள் வீட்டிற்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்த்தன் இதனை அறிந்து திட்ட அறிக்கை கேட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
தமிழிசை மற்றும் சௌந்தரராஜன் ஆகியோரின் இத்தகைய சேவை பாராட்டப்பட வேண்டியது. அரசியல் களத்தில் கொள்கை குறித்து எதிர்ப்புகள் இருக்கலாம், ஆனால் உருவ கேலி மிகத் தவறான ஒன்றாகும். முன்பே தமிழிசை சௌந்தரராஜனை கிண்டல் செய்து பதிவிட்ட தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்று நாம் பதிவிட்டு இருந்தோம்.