1 லி கோமியத்திற்கு 100 ரூபாய் தருவதாக தமிழக பிஜேபி அறிவித்ததா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
தமிழ்நாட்டில் பசு மாடு வைத்திருப்பவர்கள் அதன் கோமியத்தை அருகில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் கொடுத்து அளவை பொறுத்து அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். 1 லிட்டர் கோமியத்தின் விலை 100 ரூபாய்.
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சிக்கும், பசு மாட்டிற்கும் இடையே இருக்கும் உறவை நாடே அறிந்த ஒன்று. இந்நிலையில், பசு மாட்டின் 1 லிட்டர் கோமியத்திற்கு தமிழக பாஜக 100 ரூபாய் அளிப்பதாக ட்விட்டர் பதிவு ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவத் துவங்கி உள்ளது.
முத்து மருதநாயகம் என்பவரின் முகநூல் கணக்கில், ” எங்கள் வீட்டில் நான்கு பசுமாடு உள்ளது. ஒரு மாடு 10 லிட்டர் மூத்திரம் அடிச்சாலும் நாலு மாடு 40 லிட்டர் 40×100= 4000 இனி நானும் பணக்காரன் தான் . அப்புறம் ஒரு சின்ன டவுட்டுங்க எங்கள் வீட்டில் எருமைமாடு 12 இருக்கு லிட்டருக்கு 100 ரூபாய் வேண்டாம் ஒரு 50 ரூபாய் மேல போட்டு கொடுத்தாங்க நா போதும் ” எனக் கிண்டல் செய்து தமிழக பாஜகவின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து இருந்தார்.
தமிழக பாஜகவின் கோமியம் குறித்த ட்விட்டர் பதிவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம். நேரடியாக, தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்திற்கு சென்று தேடுகையில் செப்டம்பர் 12-ம் தேதி அப்படியொரு பதிவே இடம்பெறவில்லை. முதன்மை ஊடங்களிலும் அப்படியான செய்திகள் வெளியாகவில்லை.
பசு மாட்டின் கோமியத்தில் மருத்துவ நலன்கள் இருப்பதாக நீண்ட நாட்களாக வலதுசாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் புற்றுநோய்க்கான மருந்து மாட்டின் கோமியத்தில் இருப்பதாக பாஜக கட்சியின் ஆதரவாளர்களால் கூறப்படுவதுண்டு.
இந்நிலையில், 2019 செப்டம்பர் தொடக்கத்தில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவிகளை அறிமுகப்படுத்திய மத்திய சுகாதாரத்துறை இணைஅமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கூறுகையில், ” கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட உள்ளதாக ” தெரிவித்து இருந்தார்.
ஆன்லைனில் கோமியம் :
தமிழக பாஜகவின் ட்விட்டர் பெயரில் போலியான தகவலை பரப்பி கேளிக்கைக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால், பசு மாட்டின் கோமியம் ஆன்லைன் விற்பனையில் சக்கைபோடு போடுவதால் ஆன்லைன் வர்த்தகத்தில் கோமியத்தை விற்பனை செய்ய ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் களமிறங்கி உள்ளதாக 2017-ல் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
மதுராவில் உள்ள தீன்தயாள் தாம் பரிசோதனை கூடத்தில் கோமியம் மூலம் சோப்புகள், பேஸ்கிரீம்கள் தயாரிக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக, அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் ” சுத்தமான பசு கோமியம் ” என ஒரு லிட்டர் 197 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இவை பூஜை பயன்பாட்டிற்கு என குறிப்பிட்டு உள்ளனர்.
ராஜஸ்தானில் கோமியம் விலை :
2018-ல் ராஜஸ்தானில் Gir மற்றும் Tharparkar உள்ளிட்ட உயர் ரக பசு மாடுகளின் கோமியமானது மொத்த விற்பனை சந்தையில் லிட்டருக்கு 15 முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகியது. அன்றைய தினத்தில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ22 முதல் 25 வரை ஆக இருந்தது. இப்படி பாலின் விலையை விட கோமியத்தின் விலை அதிகமாக இருந்தது.
மேலும் படிக்க : ராஜஸ்தானில் பாலை விட கோமியத்திற்கு அதிக விலையா ? | காரணம் என்ன ?
இயற்கை விவசாயம் செய்பவர்கள் பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக மாட்டின் கோமியத்தை பயன்படுத்தினர், மருத்துவ பயன்பாடுகளுக்கு மற்றும் ஆன்மீக சடங்குகளுக்கும் மக்கள் கோமியத்தை அதிகம் பயன்படுத்தியதால் அவற்றின் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்தது.
முடிவு :
நம்முடைய தேடலில், ” பசு மாடு வைத்திருப்பவர்கள் அதன் கோமியத்தை அருகில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் கொடுத்து அளவை பொறுத்து அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். 1 லிட்டர் கோமியத்தின் விலை 100 ரூபாய் ” என தமிழக பாஜக வெளியிட்டதாக பரவும் ட்விட்டர் பதிவு போலியானவை.
பாஜக கட்சியை விமர்சனம் செய்வதற்காக போலியான ட்விட்டர் பதிவை உருவாக்கி உள்ளனர். எனினும், நாட்டில் கோமியத்தை விற்பனை குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.