திமுக அரசின் புதிய திட்டம் என பாஜக நாராயணன் பகிர்ந்த பழைய புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
எஸ்.வி சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” வாகனங்களின் என்ஜின் சூடு குறைப்பதற்கு சாலைகளில் ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை துறையினரால் கேட்டுக்கொள்ளபடுகிறது ” என சாலையில் மழை நீர் தேங்கிய பெரிய பள்ளத்தில் கார் ஒன்று விழுந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
எஸ்.வி சேகர் பதிவிடப்பட்ட புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்கிற தகவலை அளிக்கவில்லை. அவர் நகைச்சுவையாக பதிவிட்ட ட்வீட் பதிவை பார்ப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் எடுத்ததாக எண்ணுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதன் உண்மையாக்கும் வகையில், தமிழ்நாடு பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் ” திமுக அரசின் புதிய திட்டம் ” என எஸ்.வி சேகர் பதிவை பகிர்ந்து இருக்கிறார்.
ஆனால், அவர்கள் பயன்படுத்திய புகைப்படம் தமிழ்நாட்டில் தற்போதைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது அல்ல. அந்த புகைப்படம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. 2017-ம் ஆண்டிலேயே மும்பையைச் சேர்ந்தவர்கள் இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
2017-ல் சாலையில் இருக்கும் பள்ளங்கள் குறித்து மும்பை மாநகராட்சியை கிண்டல் செய்யும் வகையில் பரப்பப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்பட பதிவுகள் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட கட்டுரையில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
எனினும், இப்புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால், பழைய புகைப்படம் என்பது உறுதியாகிறது.
முடிவு :
நம் தேடலில், திமுக அரசின் புதிய திட்டம் என பாஜகவின் நாராயணன் பகிர்ந்த மழை நீர் தேங்கிய சாலை பள்ளத்தில் விழுந்த காரின் புகைப்படம் தமிழ்நாட்டில் தற்போது எடுக்கப்பட்டது அல்ல. 2017-ம் ஆண்டிலேயே மும்பையைச் சேர்ந்த பதிவுகள் மற்றும் செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது என அறிய முடிகிறது.