கோடை வெளியிலுக்கு கோமிய பானம் வழங்க பாஜகவினருக்கு அறிவுறுத்தியதாகப் பரப்பப்படும் போலி அறிக்கை !

பரவிய செய்தி
சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க தயாராவோம். எந்த ஒரு நிலையிலும் மக்கள் பணி செய்வதை லட்சியமாக கொண்டு செயல்படுபவர்கள் பாஜக தொண்டர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். கோடை வெயில் சுட்டொரிக்க தொடங்கியுள்ள வெயில் காலமிது. மக்களின் வெப்பசூட்டை போக்க பலரும் நீர் மோர் பந்தல்கலை திறப்பார்கள். ஆனால் நாம் அப்படி ஏனோதானோ என இருக்க முடியாது. மக்களின் சூட்டை போக்கும் விதத்திலும் அதேசமயம உடல் பினிகளை நீக்கும் விதத்திலும் மோருடன் கோமிய பானத்தையும், கூடவே ஸ்ராபெரி, மாங்கோ, நன்னாரிவாசனைகளிலும் வழங்கி மக்கள் மனங்கவரவேண்டும்.
மதிப்பீடு
விளக்கம்
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் தனிநபர்கள், கட்சியினர், அமைப்புகள் சார்பில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைப்பது வழக்கம். இந்நிலையில், கோடை வெளியிலுக்காக பாஜகவினர் அமைக்கும் மோர் பந்தலில் கோமியத்தை கலந்து கொடுக்க அறிவுறுத்துவதாக அண்ணாமலை கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
2023 மார்ச் தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், ” சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க தயாராவோம் எந்த ஒரு நிலையிலும் மக்களுக்கு தொண்டு செய்வதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவதில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் முதன்மையானவர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் ” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க தயாராவோம்
எந்த ஒரு நிலையிலும் மக்களுக்கு தொண்டு செய்வதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவதில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் முதன்மையானவர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
– மாநில தலைவர் திரு.@annamalai_k #Annamalai pic.twitter.com/Nq4qJ8nmWG
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 27, 2023
மேற்காணும் அறிக்கையில், கோடை காலம், சுட்டெரிக்கும் வெயில், இது மக்களை வாட்டும் காலம். மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையிலும், மக்களின் களைப்பை போக்கும் வகையிலும், ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள், அமைப்பது, பழங்கள் வழங்குதல் போன்ற சேவைகளை பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆண்டுதோறும் புரிந்து வருவது வழக்கமான ஒன்று.
அதேபோன்று கோடை காலம் துவங்கி உள்ள இன்றைய சூழலில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கும் பணியில் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள், அனைவரும் முழு வீச்சில் ஈடுபட வேண்டும். அந்த தண்ணீர் மோர் பந்தல்களை தினசரி பராமரிக்க வேண்டும். மக்கள் தேடி வந்து பயன்படுத்துமாறு அங்கு நல்ல சூழலை உருவாக்கி தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ” என இடம்பெற்று இருக்கிறது.
தமிழ்நாடு பாஜக தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கோமிய பானம் எனப் போலியாக எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : அசைவம் சாப்பிடுபவர்களை அயோக்கியர்கள் என அண்ணாமலை பேசியதாகப் பரவும் பொய் செய்தி !
மேலும் படிக்க : அண்ணாமலைக்கு கூட்டணியை முறிக்க யார் அதிகாரம் தந்தது என ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !
இதற்கு முன்பாக, பாஜக தலைவர் அண்ணாமலைப் பற்றி பரவிய போலிச் செய்திகள் குறித்தும், அண்ணாமலை பேசிய பொய்களின் தொகுப்பு கட்டுரைகளும் வெளியிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க : பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன பொய்களின் தொகுப்பு
முடிவு :
நம் தேடலில், கோடை வெளியிலுக்கு மோருடன் கோமிய பானத்தை கலந்து கொடுக்க பாஜகவினருக்கு அறிவுறுத்தி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாகப் பரப்பப்படும் அறிக்கை போலியானது என்பதை அறிய முடிகிறது.