லாக்டவுன் பிறகு எடுத்த பேருந்து விபத்து என கிண்டலாக பரவும் பழைய புகைப்படம் !

பரவிய செய்தி
ஆறு மாசமா ரெஸ்ட் எடுத்தவனை, திடீர்னு இன்னிக்கு பஸ்சை ஓட்றானு சொன்னதும் சொன்னாங்க.. பிரேக்கு எங்க இருக்கு, ஆக்சிலேட்டர் எங்க இருக்குனே மறந்து போயிட்டாரு ட்ரைவர் ! ( அதுக்காக, கரப்பான் பூச்சி கவுத்துப் போட்ட மாதிரியாடா கவுத்துப் போடுவ ?) இடம் ; அரவங்காடு
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா பெரும்தொற்றால் உண்டான பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கட்டுப்பாடுகள் உடன் வழக்கம் போல பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளன. இந்நிலையில், பொதுமுடக்கத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பேருந்து விபத்துக்குள்ளானதாக கவிழ்ந்து கிடக்கும் பேருந்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
மார்ச் 21-ம் தேதியில் தொடங்கப்பட்ட கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு ஜூன் மாதத்தில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை செயலில் இருந்தது. எனினும், கொரோனா பரவல் காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், தற்போது செப்டம்பர் 1-ம் முதல் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை தொடங்கப்பட்டது. பேருந்து விபத்து குறித்து பரவும் இப்பதிவு கிண்டலுக்காக பரப்பத் தொடங்கி இருக்கலாம். ஆனால், பல பதிவுகளில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் என்றே குறிப்பிட்டு வருகிறார்கள்.
அரவங்காடு பகுதி நீலகிரி மாவட்டத்தில் அமைந்து உள்ளது. பேருந்து சேவை தொடங்கப்பட்ட பிறகு அரவங்காடு பகுதியில் விபத்து நிகழ்ந்ததாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. மாறாக, நீலகிரி பகுதியில் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் குவிவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
பேருந்து கவிழ்ந்து இருக்கும் பகுதியில் மக்கள் கூட்டமாய் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி இன்றியே காணப்படுகின்றனர்.ஆகவே, பேருந்து விபத்து பழைய செய்தியாக இருக்கக்கூடும். அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018 அக்டோபர் 22-ம் தேதி திசப்எடிட்டர் எனும் இணையதளத்தில், நெல்லை-தென்காசி சென்ற அரசு பேருந்து ஆலங்குளம் அருகே விபத்துக்குள்ளானதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
அச்செய்தியை வைத்து தேடுகையில், நெல்லையில் இருந்து தென்காசி சென்ற அரசு பேருந்து நல்லூரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார், 30 பேர் காயமடைந்து உள்ளதாகவும் செய்திகளில் 2018 அக்டோபர் 22-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
2018-ம் ஆண்டில் நெல்லை-தென்காசி சாலையில் பயணித்த அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடக்கும் புகைப்படத்தை கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு பேருந்து ஓட்டுநர் ஒட்டத் தெரியாமல் ஓட்டி விபத்து நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள். இதை வைத்து ஓட்டுனர்களை கிண்டல் செய்து வருவது சரியல்ல.
முடிவு :
நம் தேடலில், அரவங்காடு பகுதியில் ஆறு மாதங்களுக்கு பிறகு எடுத்த பேருந்து விபத்துக்குள்ளானதாக பரவும் தமிழக அரசு பேருந்து புகைப்படம் நெல்லையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.