அதிமுக ஆட்சியில் எடுத்த அரசு பேருந்து படத்தை தற்போது எடுக்கப்பட்டது போல் பதிவிட்ட சி.டி.நிர்மல் குமார் !

பரவிய செய்தி
புதிய மாடல் Innova காரில் மந்திரி, கால் வைக்க கூட இடம் இல்லாமல் மக்கள்… வாழ்க #திராவிட_மாடல்
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சி.டி.நிர்மல் குமார் சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், திமுக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு அரசு சார்பில் புதிய கார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் பேருந்தில் நிற்க கூட இடம் இல்லாமல் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர் எனப் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
புதிய மாடல் Innova காரில் மந்திரி,
கால் வைக்க கூட இடம் இல்லாமல் மக்கள்…
வாழ்க #திராவிட_மாடல் pic.twitter.com/uTua4hxXMC
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) August 9, 2023
உண்மை என்ன ?
சி.டி.நிர்மல் குமார் பதிவிட்ட, பேருந்து புகைப்படம் பற்றித் தேடியதில், அது 2016ம் ஆண்டு முதல் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் பல்வேறு செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.
நிர்மல் குமார் பதிவிட்ட பேருந்து படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘தினகரன்’ இணையதளத்தில் ‘சென்னையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்: சென்னை போலீஸ் எச்சரிக்கை’ என்ற செய்தி கிடைத்தது. அதில், அப்புகைப்படம் இடம்பெற்றிருப்பதை இருப்பதைக் காண முடிந்தது.
அதற்கு முன்பு 2017ம் ஆண்டு இரண்டு பள்ளி மாணவர்கள் பேருந்து பயணத்தின் போது கீழே விழுந்து இறந்தது தொடர்பாக ‘Behindwoods’ என்ற தளத்தில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் அப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இவற்றுக்கும் முன்பாக 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘Dt Next’ இணையதளத்தில், தமிழ்நாட்டில் மினி பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பான செய்தியில் அப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அப்படத்திற்குக் கீழே ‘தரமணிக்கு அருகில் மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைத்த ஆதாரங்களில் இதுவே பழையதாகும். 2016ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதும் மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்வது நிகழ்ந்த வண்ணமே உள்ளது. இதனைத் தடுக்க எல்லா காலங்களிலும் அரசும், காவல் துறையும், போக்குவரத்து நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த நிர்மல் குமார் அரசியல் காரணங்களுக்காக, திமுக அமைச்சரை விமர்சிக்க அதிமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்ட படத்தையே பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : தமிழ்நாடு ‘பாஜகவின் ஐடி விங்’ தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு
இதற்கு முன்னதாக நிர்மல் குமார் பரப்பிய வதந்திகள் பற்றிய தொகுப்பினை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சருக்கு புதிய வாகனம் அளிக்கப்படுகிறது. ஆனால், அரசு பேருந்தில் மக்கள் கால் வைக்கக் கூட இடம் இல்லாமல் பயணம் செய்கின்றனர் என அதிமுகவைச் சேர்ந்த சி.டி.நிர்மல் குமார் பதிவிட்ட புகைப்படம் 2016ம் ஆண்டு வெளியான செய்தியிலேயே இடம்பெற்றுள்ளது. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.