தமிழக அரசு பேருந்துகளில் தமிழுக்கு பதில் இந்தியில் குறிப்புகள் | போக்குவரத்துத்துறை விளக்கம்.

பரவிய செய்தி
தமிழக மக்களின் வரிப் பணத்தில் தமிழக அரசால் புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகளில் இந்தியில் குறிப்புகள். தமிழுக்கு இடமில்லை.
மதிப்பீடு
விளக்கம்
புதிதாக வாங்கப்பட்ட தமிழக பேருந்துகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்புகள், தமிழுக்கு இடமில்லை என பரவும் செய்திகளின் நம்பகத்தன்மையை குறித்து ஆராய்ந்த பொழுது, அது தொடர்பான செய்திகள் வெளியாகி இருப்பதை காண முடிந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பாக 500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. புதிதாக வாங்கிய பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்துத் துறை சார்பில்,
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 பேருந்துகள்,
அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள்,
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 10 பேருந்துகள்,
சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 20 பேருந்துகள், pic.twitter.com/QS2yWv85oM
Advertisement— M.R Vijayabhaskar (@OfficeofminMRV) July 4, 2019
இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தன் ட்விட்டர் பக்கத்தில், ” பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்துத் துறை சார்பில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 10 பேருந்துகள், சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 20 பேருந்துகள் வாங்கப்பட்டு உள்ளதை குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், புதிதாக இயக்கப்பட்ட தமிழக பேருந்துகளில் அவசர வழி உள்ளிட்ட குறிப்புகள் இருக்கும் ஸ்டிக்கர்கள் அனைத்தும் தமிழுக்கு பதிலாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்று இருந்தன. அரசு பேருந்துகளில் தமிழுக்கு பதிலாக இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே குறிப்புகள் இடம்பெற்றதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுகின்றன.
தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால்,நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.#stopHindiImposition pic.twitter.com/SqAQfEJI6N
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 7, 2019
இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்.பி கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், ” தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் ” என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு தமிழக அரசு போக்குவரத்துதுறை கூறுகையில், புதிய பேருந்துகள் வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆகையால், குறிப்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது உண்மை தான். ஆனால், பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக அவை நீக்கப்பட்டுள்ளன. தற்பொழுது எந்த பேருந்திலும் இந்தி மொழியில் ஸ்டிக்கர்கள் இல்லை ” என விளக்கம் அளித்து இருக்கிறது.
தமிழக பேருந்துகளில் இந்தியில் குறிப்புகள் இருந்தது உண்மையே !. அதற்கு தமிழக போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்து உள்ளது. தமிழக பேருந்துகளில் இந்தி மொழியில் இடம்பெற்ற ஸ்டிக்கர்களின் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.