குழந்தைகளை கடத்த தமிழ்நாட்டிற்கு வந்த வடமாநில கும்பல் எனப் பரவும் பழைய வாட்ஸ் வதந்தி !

பரவிய செய்தி
இந்த போட்டோவில் இருப்பவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக போலீசால் அரஸ்ட் செய்யப்பட்டவர்கள். இவங்க 200 பேருக்கு மேல் பீகார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இறங்கி இருக்கிறார்கள். இவர்கள் குழந்தைகளை கடத்துவதற்காக வந்த கும்பல். கோடை விடுமுறை நாட்களில் பொருட்காட்சி, பீச் செல்லும் போது குழந்தைகள் மீது கவனமாக இருங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் குழந்தைகளை கடத்த 200 பேருக்கு மேல் கொண்ட கும்பல் ஒன்று வடமாநிலங்களில் இருந்து இறங்கி உள்ளதாக 1.22 நிமிட ஆடியோ பதிவு ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்டவையில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த ஆடியோ உடன் கைது செய்யப்பட்ட நிலையில் இருக்கும் 5 பேரின் புகைப்படமும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
வாட்ஸ்அப்-ல் பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அப்புகைப்படம் கடந்த 2018ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் சுற்றி வரும் வதந்தியுடன் இணைக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
2018ம் ஆண்டு மே மாதம் இதே புகைப்படம் மற்றும் வாட்ஸ்அப் தகவல் கர்நாடகா மாநிலம் பெங்களூரைக் குறிப்பிட்டு பரவிய போது, இது போலியான செய்தி என பெங்களூர் நகர காவல் ட்விட்டரில் பதில் அளித்து இருந்தது.
மேலும் படிக்க : புரளியால் உயிர் பலி, பரப்பியவர் அதிரடிக் கைது!
இதேபோல், ‘2018 செப்டம்பரில் வடநாட்டில் இருந்து 100 பேர் கொண்ட கும்பல் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். பல இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள் ‘ எனப் பரவிய வாட்ஸ்அப் வதந்தியால், குலதெய்வ கோவிலுக்கு சென்றவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் ஒரு மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தது குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இதுபோல் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும் படிக்க : சேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளதாக வாட்ஸ் அப் வதந்தி !
மேலும் படிக்க : உறுப்பு திருட்டுக்காக குழந்தைகளை கடத்தியதாக பரவும் வீடியோ | உண்மை என்ன ?
2023 மார்ச் மாதத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு தமிழ்நாடு மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான உருவான பரபரப்பு சூழல் ஓய்ந்து உள்ள நிலையில், மீண்டும் குழந்தை கடத்தல் தொடர்பான பழைய வாட்ஸ் அப் வதந்தியை பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகளுக்கு ஆபத்து என பீகாரில் பொய் பிரச்சாரம் செய்யும் பாஜக, இந்தி ஊடகங்கள்
முடிவு :
நம் தேடலில், வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு குழந்தைகளை கடத்த வந்த கும்பலை காவல்துறை கைது செய்ததாகப் பரப்பப்படும் புகைப்படம் மற்றும் ஆடியோ வதந்தியே. கடந்த 2018ம் ஆண்டில் இருந்தே இந்த வாட்ஸ் ஆப் வதந்தி தென்மாநிலங்களில் பரப்பப்பட்டு வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.